

விருதுநகர்: ராகுல் காந்தி நடைபயணத்துக்கு 10 லட்சம் பேரை திரட்ட திட்டமிட்டுள்ளோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் செப்.7-ல் பாத யாத்திரையை தொடங்குகிறார். இதுதொடர்பாக விருதுநகர், மதுரை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியது: காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை ராகுல் காந்தி வரும் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்குகிறார். பாஜகவின் தவறான அரசியல், பொருளாதார கொள்கையை வெளிப்படுத்தவும், நாட்டில் நிலவும் அமைதியின்மை, மக்களை பிரிக்கும் சித்தாந்தத்துக்கு எதிரான சித்தாந்தத்தை கையில் எடுத்துதான் ராகுல் நடைபயணத்தை மேற்கொள்கிறார். இதற்காக 10 லட்சம் பேரை திரட்ட திட்டமிட்டுள்ளோம்.
குலாம்நபி ஆசாத் விவகாரத்தில், பழுத்த மட்டை விழுந்துவிடும். ஒரு அமைப்பு 100 சதவீதம் சரியாக இருக்க முடியாது. இவ்வளவு காலம் அந்த குறை தெரியவில்லை. காரணம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அதன் பலனை அவர் அனுபவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். பேசுவதை இன்று ஆளுநர் ரவி பேசுகிறார். திருக்குறளை மொழி பெயர்த்தவர்கள் அதில் இருந்த ஆன்மிகத்தை எடுத்துவிட்டு மொழி பெயர்த்துள்ளார்கள் எனத் தமிழ் மொழியே தெரியாதவர் கூறுகிறார். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மனிதநேயத்தை மையப்படுத்தி எழுதப்பட்டது திருக்குறள். இது சமய நூல் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.