

முதல்வர் ஜெயலலிதா குணமடைந்ததும் அவரை சந்தித்து பேசுவேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
முதல்வர் ஜெயலலிதா கடந்த 13 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
முதல்வரிடம் உடல்நலம் குறித்து நலம் விசாரிக்க அப்பலோ மருத்துவமனைக்குச் சென்றவர்கள் யாரும் அவரை நேரில் பார்த்ததாகவோ, நேரில் நலம் விசாரித்ததாகவோ சொல்லவில்லை. இந்நிலையில், நானும் மருத்துவமனைக்குச் சென்று அவருக்கு தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை.
முதல்வர் குணமடைந்ததும் அனுமதி கிடைத்தால் அவரை நேரில் சந்தித்துப் பேசுவேன். நான் அதிமுக இளைஞரணிச் செயலாளராக இருக்கும்போது அவர் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். எனவே, தனிப்பட்ட முறையிலும், தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையிலும் அவரை சந்திப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.