

வழக்குப்பதிவு செய்ய லஞ்சம் கேட்ட புது வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீதான புகாரை துணை ஆணையர் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வி.சுதாகர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடகு வைத்த நகைகளை மீட்க வேண்டுமெனக் கூறி எனது நண்பர் மோகன் ரூ.2 லட்சத்தை கடனாகப் பெற்றார். அந்தக் கடனை திருப்பிக் கேட்டபோது கவரிங் செயினை கொடுத்து என்னை ஏமாற்றினார்.
இது தொடர்பாக புது வண்ணாரப்பேட்டை போலீஸில் புகார் அளித்தேன். ஆனால் எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய காவல் ஆய்வாளர் பீர் பாட்ஷா, சார்பு ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் ரூ.1 லட்சம் லஞ்சமாக வழங்க வேண்டுமென்றும் முன்பணமாக ரூ.25 ஆயிரம் தர வேண்டும் என்றும் கேட்டனர். அதன்படி லஞ்சப்பணத்தை வழங்கினேன்.
வீடியோ எடுத்து புகார்
அதை வீடியோ எடுத்து கடந்த ஜூன் 13 அன்று லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் தமிழக டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையரிடம் புகார் அளித்ததால், எனது புகாரை பெற்றுக் கொண்டதற்கான ரசீது மட்டும் அளித்தனர் என அதில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், "மனுதாரரின் புகார் குறித்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் மீதான புகார் உண்மை என தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.