Published : 28 Aug 2022 07:53 AM
Last Updated : 28 Aug 2022 07:53 AM
சென்னை: சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டையொட்டி கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, 236 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
சுகாதாரத் துறை சார்பில் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், ரூ.65.60 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 1819-ம்ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை, ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கண் மருத்துவமனையாகும். 2019-ல் 200 ஆண்டுகளைக்கடந்தது. சுமார் 300 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் இம்மருத்துவமனையில், தினமும் 600 முதல் 800 பேர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.
தற்போது 478 படுக்கைகளுடன் செயல்பட்டு வரும் இம்மருத்துவமனையில் மாதந்தோறும் 600 முதல் 700 கண்புரை அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. மாதந்தோறும் 40 ஜோடி கண்கள் தானமாகப் பெறப்பட்டு, 20 கண்கள்கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது இங்கு ரூ.65.60 கோடியில் 6 தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு 150 படுக்கை வசதிகளுடன், புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை, கருவிழி சிகிச்சை, கண்குழி சிகிச்சை, விழித்திரை சிகிச்சை, உள் கருவிழி சிகிச்சை,கண் நரம்பியல், மாற்றுக்கண் சிகிச்சை உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
திறப்பு விழாவுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முதல்வர் ஸ்டாலின் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
மேலும், காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.1.77 கோடியில் டெலி கோபால்ட் இயந்திரம். கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.5.73 கோடியில் தீவிர மூளைக் காய்ச்சல் ஆய்வகம். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் ரூ.7.75 கோடியில் 18 மின்தூக்கிகள். கள்ளக்குறிச்சி கரியாலூரில் உள்ள துணை செவிலியர் பயிற்சி பள்ளியில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டுள்ள ஊரக பயிற்சி மையக் கட்டிடம், ராமநாதபுரம் பார்த்திபனூரில் உள்ள துணை செவிலியர் பயிற்சிப் பள்ளிக்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடம், திருவள்ளூர் பூந்தமல்லி பொது சுகாதார நிலையத்தில் ரூ.1.20 கோடியில் துணை செவிலியர் பயிற்சி பள்ளிக் கட்டிடம். திருவாரூர் மாவட்டம் ஆதிச்சபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.20 கோடியில் புறநோயாளிகள் பிரிவுக் கட்டிடம், ரூ.1 கோடியில் மண்டல பயிற்சி மையக் கட்டிடம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்துவைத்தார்.
அதேபோல, உடுமலைப்பேட்டை, சிவகாசி அரசு மருத்துவமனைகள், கும்பகோணம், கோவில்பட்டி, மன்னார்குடி, மணப்பாறை, பரமக்குடியில் உள்ளமாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மொத்தம் ரூ.9.45 கோடியில் நிறுவப்பட்டுள்ள ஆர்டிபிசிஆர் ஆய்வகங்கள், பாபநாசம் அரசு மருத்துவமனையில் ரூ.1.50 கோடியில் கூடுதல் கட்டிடம், ஓசூர் அரசுமருத்துவமனையில் ரூ.10.50 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலக் கட்டிடம், போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் ரூ.1.50 கோடியில் கூடுதல் கட்டிடம், மதுரை மேலக்குயில்குடியில் ரூ.20 கோடியில் மருந்து பரிசோதனை ஆய்வகம், மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர்கள் அலுவலகக் கட்டிடம் என மொத்தம் ரூ.129.20 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்வர் திறந்துவைத்தார்.
பல்வேறு திட்டப்பணிகள்
தொடர்ந்து, ரூ.1.30 கோடி மதிப்பில் ஸ்ட்ரெச்சருடன் கூடிய பேட்டரிகார்கள், 74 சிறப்பு பச்சிளம் குழந்தைப் பராமரிப்பு பிரிவுகளுக்கு ரூ.15 கோடியில் வென்டிலேட்டர்கள், ரூ.49.15 கோடியில் உயர்நிலை வண்ண அல்ட்ரா சவுண்ட் இயந்திரங்கள் என மொத்தம் ரூ.65.45 கோடி மதிப்பிலான கருவிகள் மற்றும் ஊர்திகளையும் வழங்கினார்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் சுகாதாரத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 152 களப் பணி உதவியாளர்கள், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 76மருந்தாளுநர்கள், சுகாதாரப் போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 திறன்மிகு உதவியாளர்கள் (நிலை-II), அலுவலக உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் என மொத்தம் 236 பேருக்கு பணி நியமனஆணைகளை வழங்கும் வகையில், 10 பேருக்கு முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
விழாவில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், சென்னை மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏ-க்கள் இ.பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, இரா.மூர்த்தி, அசன் மௌலானா, ஜெ.ஜெ.எபினேசர், த.வேலு, துணை மேயர் மு.மகேஷ்குமார், சுகாதாரத் துறைச் செயலாளர் ப.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதேபோல, காணொலிக் காட்சி மூலமாக அமைச்சர் பி.மூர்த்தி, எம்.பி. ஏ.செல்லகுமார், எம்எல்ஏ ஓய்.பிரகாஷ், மதுரை ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், கிருஷ்ணகிரி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT