Published : 28 Aug 2022 05:33 AM
Last Updated : 28 Aug 2022 05:33 AM
சென்னை: தேசியக் கொடியை உள்நாட்டில் தயாரிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கனடா ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது பேரவைத் தலைவர்களுக்கான காமன்வெல்த் மாநாடு அண்மையில் நடைபெற்றது. அதில் பல்வேறு நாடுகளின், மாநிலங்களின் பேரவைத் தலைவர்கள் பங்கேற்றனர். தமிழகப் பிரதிநிதியாக பேரவைத் தலைவர் அப்பாவு, மத்திய அரசின் பிரதிநிதியாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாநாடு நடைபெற்ற வளாகத்தில் பேரவைத் தலைவர்கள் கையில் தேசியக் கொடியை ஏந்தி பேரணியாக வந்தனர். அந்த தேசியக் கொடியில் 'மேட் இன் சைனா' என எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்திய - சீன எல்லையில் போர் வீரர்களுக்குள் கலவரம் வெடித்ததன் எதிரொலியாக இந்தியாவில் சீனாவின் கைபேசி செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால் சீனாவில் இருந்து அதிகமாக பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா இருக்கிறது.
‘ஆத்ம நிர்பார் பாரத் (சுயசார்பு இந்தியா)' என்று பெருமையாக அறிவித்தால் மட்டும் போதுமா? நம் நாட்டின் தேசியக் கொடியை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதுதான் சுயசார்பா? இந்த நிலையில் தேசபக்தி பற்றிய பாடத்தை மற்றவர்களுக்கு மத்திய அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது.
எந்த நாடும், அவர்களின் தேசியக் கொடியை மற்ற நாடுகளில் தயாரித்ததாக செய்திகள் இல்லை. ஆகவே, தேசியக் கொடியை நம் நாட்டில்தான் தயாரிக்க வேண்டும். தேசியக் கொடி பற்றி ஏற்கெனவே கடைபிடிக்கப்பட்டு வந்த நெறிமுறைகளை மத்திய அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT