

கீழடியில் தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட தமிழர்களின் பண்பாட்டு தடையங்களை பாதுகாக்க ஆய்வகம் அமைக்க தேவையான இடம் வழங்க வேண்டும் என தமிழக அரசை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் இன்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கீழடிக்கு அருகில் உள்ள சிலைமான் என்ற ஊரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுப்ரமணியம் என்பவரின் 10 ஆண்டுகால ஆய்வில் கீழடி கிராமத்தில் கி.மு.2050 முதல் கி.மு.5000 வரையிலான காலத்தைச் சேர்ந்த பழந்தமிழர் வாழ்வியல் குடியிருப்புகள் 100 ஏக்கர் நிலப்பரப்பில் மண்ணுக்குள் புதைந்து இருக்கும் விவரம் வெளியே தெரிய வந்தது. இதுகுறித்து, பெங்களூரில் உள்ள இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் மேற்கொண்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இப்பகுதி முழுவதும் தனியார் சிலருக்குச் சொந்தமான தென்னந்தோப்பாக உள்ளது. மார்ச் முதல் செப்டம்பர் வரை தென்னை மரங்களுக்கு பாதிப்பு இல்லாமல் குழிகளை அமைத்து ஆய்வு செய்வதாகவும், பின்னர் அந்தக் குழிகளை மூடிக் கொடுத்து விடுவதாகவும் தொல்லியல் துறையினர் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்நிலையில், ஆசிரியர் பாலசுப்பிரமணியம் கீழடியில் கிடைக்கும் கணக்கில் அடங்காத் தொல்லியல் பொருட்கள மேலே எடுத்து பாதுகாப்பாக வைப்பதற்கு ஒரு வரலாற்று ஆய்வகம் அமைக்க வேண்டும். அதற்கு 2 ஏக்கர் நிலம் வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கும், மாநில அரசுக்கும் கடிதம் அனுப்பினார்.
அதற்கு உரிய பதில் கிடைக்காததால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். ஆசிரியர் பாலசுப்பிரமணியின் கோரிக்கையை நிறைவேற்றித் தரும்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக அரசுக்கு உத்தரவு வந்த பின்னர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆய்வகம் அமைக்கத் தேவையான நிலத்தை தேடிக் கொண்டிருக்கிறார்.
இதனிடையே கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழர்களின் பண்பாட்டு தடையங்களை பெங்களூர் கொண்டு செல்லக் கூடாது என சங்கம்-4 என்ற அமைப்பைச் சேர்ந்த கனிமொழி என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்..
எனவே இவ்வழக்கை விரைந்து முடித்திடவும், தமிழக அரசு சார்பில் தேவையான இடமும், நிதிம் ஒதுக்கி கொடுக்க ஆவன செய்திட வேண்டும்'' என்று வைகோ கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.