

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கோவையில் பிடிபட்ட 16 இளைஞர்களிடம் நேற்று 10-வது நாளாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கேரள மாநிலத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, 6 பேரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். அவர்களில், கோவை தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த அபு பஷீர் (எ) ரஷீத்(26) என்பவரும் ஒருவர். அவரிடம் விசாரணை நடத்தியதில் மேலும் சிலருக்கு ஐஎஸ் அமைப்பினருடன் தொடர்பு இருக்கலாம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கோவையைச் சேர்ந்த 16 பேரைப் பிடித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு அலுவலகத்துக்கு ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு, தினமும் காலை 11 மணி முதல் விசாரணை நடத்தப்பட்டு, இரவு 9 மணியளவில் அனுப்பிவிடுகின்றனர். இவ்வாறு கடந்த 10 நாட்களாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை நீடிக்கும்
இதுகுறித்து என்ஐஏ அதிகாரி கள் தரப்பில் கூறும்போது, “ஐ.எஸ். அமைப்பினருடன் தொடர்பு இருக்க லாம் என்ற சந்தேகத்தின்பேரில் இதுவரை 16 பேரைப் பிடித்து விசாரித்து வருகிறோம். அவர்களி டம் இருந்து பல்வேறு விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களுக்கு விசாரணை நீடிக்கும். பிடிபட்டவர்களில் சிலர் மீதான சந்தேகம் அதிகரித்துள்ளது. எனினும், விசாரணையின் முடிவுக் குப் பின்னரே, மேல்நடவடிக்கை குறித்து தெரியவரும்” என்றனர்.