

தீபாவளி பண்டிகையன்று 108 ஆம்புலன்ஸ் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பேட்ரிக் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மகத்தான ஒன்று. இதன்மூலம் விபத்து நேரங்களில் ஏற்படும் உயிர்ப்பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஏற்படும் பட்டாசு விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சேவை பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் கள் போனஸ் கேட்டு போராட்டம் அறிவிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டும் இதேபோல அவர்கள் போராட்டம் அறிவித்தனர். அப்போது அதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘‘ஒவ்வொரு ஆண்டும் இதே பிரச்சினை எழுப்பப் படுகிறது. ஆம்புலன்ஸ் என்பது பொது மக்களுக்கான சேவை. எனவே ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதம். தீபாவளியன்று 108 ஆம்புலன்ஸ் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
தற்போது இந்த ஆண்டும் 25 சதவீத போனஸ் வழங்குதல் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அக்டோபர் 28-ம் தேதி இரவு 8 மணி முதல் தீபாவளி பண்டிகை தினமான அக்டோபர் 29-ம் தேதி இரவு 8 மணி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். எனவே, இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். தீபாவளியன்று ஆம்புலன்ஸ் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதியைக் கொண்ட அமர்வில் நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கள், ‘‘இதுதொடர்பாக கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதே உத்தரவை இந்த ஆண்டும் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். ஆம்பு லன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது சட்ட விரோதமானது. அதை அனுமதிக்க முடியாது. அதேநேரம் தீபாவளியன்று ஆம்புலன்ஸ் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. எனவே அதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.