

அலிகர் பல்கலைக் கழக தமிழ் பேராசிரியர் மூர்த்தி மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் நவீன இந்திய மொழிகள் துறையின் தலைவர் தமிழ் பேராசிரியர் து.மூர்த்தியின் மரணச் செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரா. மூர்த்தி அனைவருடனும் இனிமையாகப் பழகக் கூடியவர். சிறந்த சமூக சேவகர். நான் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் சென்ற வேளையில் என்னுடன் கலந்துரையாடியது இன்னும் பசுமையாக உள்ளது.
பேரா. மூர்த்தி உடல்நலம் குன்றி கடந்த 23.10.2016 அன்று பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் வயிற்று உபாதைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் பேராசிரியர் மூர்த்தி இருந்துள்ளார். பின்னர் அவரது சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் மேல்சிகிக்சைக்காக டெல்லிக்கு அனுப்ப பரிந்துரை செய்வதற்கும் அதற்காக ஆம்புலன்ஸ் வசதி செய்வதற்கும் மருத்துவர்களின் அலட்சியப் போக்கால் 7 மணிநேரம் காலதாமதமாகியுள்ளது. இந்த நிலையில் பேரா.மூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உயிர் பிரிந்தது. டெல்லிக்கு உடனடியாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் உயிரை காப்பாற்றியிருக்கலாம்.
இதுபோன்ற அலட்சிய சம்பவங்கள் இனிமேலும் நிகழாமல் இருக்க பேரா.மூர்த்திக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சையில் அலட்சியம் காட்டிய மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.