Published : 05 Apr 2014 11:30 AM
Last Updated : 05 Apr 2014 11:30 AM

ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஜூனில் சோதனை: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல்

4000 முதல் 4,500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் சோதனை வரும் ஜூன் மாதத்தில் நடத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறியதாவது: ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி செயற்கைக் கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் திட்டமிட்டபடி வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதுவரையில் 26 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் முதல் ராக்கெட் மட்டுமே தோல்வியடைந்தது. அதன்பிறகு தொடர்ந்து 25 ராக்கெட்கள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளன.

இஸ்ரோ மொத்தம் 7 நேவிகேஷன் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவுள்ளது. இவற்றில், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ என்ற செயற்கைக்கோள் கடந்த ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி மற்றும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி ஆகியவை விண்ணில் செலுத்தப்படும். மீதமுள்ள 3 செயற்கைகள் 2015க்குள் செலுத்தப்படும்.

கிரையோஜெனிக் இயந்திரம் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் தற்போது 2000 முதல் 2,500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை மட்டுமே சுமந்து செல்லும். அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை நவீனப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி, மார்க்-3 என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளோம். இந்த ராக்கெட் 4000 முதல் 4,500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என்ற ராக்கெட்டின் சோதனையை வரும் ஜூன் மாதம் நடத்தவுள்ளோம்.

இதேபோல், வரும் ஜூன் மாதத்தில் பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் மூலம் 5 வெளிநாட்டு செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளன. 2017-ம் ஆண்டிற்குள் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா என்ற செயற்கைக்கோளும், நட்சத்திரங்களை ஆய்வு செய்ய ஆஸ்ரா என்ற செயற்கைக்கோளும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

2-வது ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. அது குறித்து மத்திய அரசு குழு ஆய்வு செய்த பின்னரே முடிவு செய்யப்படும். 12வது ஐந்தாண்டு திட்டத்தில் இஸ்ரோவுக்கு ரூ.39,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டுமே ரூ.13,650 கோடி வரையில் திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது.

ராக்கெட் தயாரிப்பதற்கான உதிரி பாகங்களை வெளிநாடுகளில் இருந்து வாங்கிக் கொண்டு இருக்கிறோம். அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். செவ்வாய்கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் இலக்கை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது. தினமும் 7 லட்சம் கி.மீ. பயணம் செய்து கொண்டு இருக்கிறது. வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் செவ்வாய் கிரகத்தை அடையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x