Published : 28 Aug 2022 04:33 AM
Last Updated : 28 Aug 2022 04:33 AM

தமிழகம் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது - தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் விரைவில் வானிலை செயலி

சென்னை துறைமுக வளாகத்தில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புனரமைக்கப்பட்ட ரேடார் சேவையை தொடங்கிவைத்து பேசுகிறார் இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் எம்.மொஹாபாத்ரா. உடன் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன், சென்னை மாநகர வெள்ளப் பெருக்கை தணித்தல் மற்றும் நிர்வகித்தலுக்கான ஆலோசனைக் குழு தலைவர் வெ.திருப்புகழ், சென்னை துறைமுக செயலர் இந்திரனில் அஸ்ரா, இஸ்ரோ ரேடார் பிரிவு துணை இயக்குநர் வி.கே.ஆனந்தன். படம்: ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வானிலை செயலி உருவாக்கப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் எம்.மொஹாபாத்ரா தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுக அலுவலக வளாகத்தில், சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் நவீன ரேடார்கடந்த 2012-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 2018-ம் ஆண்டு ரேடாரில் பழுது ஏற்பட்டது. தற்போது பழுது நீக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட ரேடார் சேவை தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் எம்.மொஹாபாத்ரா பங்கேற்று ரேடார் சேவையைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் முதன்முதலில் சென்னையில்தான் ரேடார் நிறுவப்பட்டது. கரோனா பரவல் பொது முடக்கம், பழுதை நீக்க ஜெர்மன் நாட்டு நிறுவனம் ஒத்துழைக்காதது போன்ற பல்வேறு தடைகளைத் தாண்டி, உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மூலம் இந்த ரேடார் புனரமைக்கப்பட்டுள்ளது.

2 பருவக்காற்றுகளால் மழை

தமிழகம் தனித்தன்மை வாய்ந்த மாநிலம். அதனால் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இம்மாநிலத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவக்காற்றுகளால் மழை கிடைக்கிறது. தமிழகத்துக்காக சென்னையில் துறைமுகம், பள்ளிக்கரணை, காரைக்கால், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஆகிய 4 இடங்களில் செயல்பட்டு வரும் ரேடார்கள் மூலம் வானிலை தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் ரேடார் கிடையாது.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் விரைவில் வானிலை செயலி உருவாக்கப்படும். நாடு முழுவதும் ஏற்கெனவே 1,060 இடங்களில் வானிலை கண்காணிப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் நிறுவ இருக்கிறோம். தமிழகத்தில் கூடுதலாக 15 இடங் களில் நிறுவப்பட உள்ளது.

முன்னறிவிப்பு

தமிழகத்தில் நகர்ப்புறங்கள் அளவில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு கண்காணிப்பு மேற்கொள்ள உரியநடவடிக்கை எடுக்கப்படும். வானிலை முன்னறிவிப்பு வழங்குவதில் முன்பு 60 சதவீதம் துல்லியம் இருந்தது. இப்போது அது 75 சதவீதமாக உயர்ந்துள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மூலம் வரும் காலங்களில் வானிலை முன்னறிவிப்பின் துல்லிய சதவீதம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மாநகர வெள்ளப் பெருக்கை தணித்தல் மற்றும் நிர்வகித்தலுக்கான ஆலோசனைக் குழு தலைவர் வெ.திருப்புகழ் கூறும்போது, ‘‘பேரிடர்களால் முன்பு அதிகஉயிரிழப்புகள் இருந்தன. வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புகளால் வெள்ளம் மற்றும் வெப்ப அலைகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துவிட்டன’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன், சென்னை துறைமுக செயலர்இந்திரனில் அஸ்ரா, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்பா.செந்தாமரைக் கண்ணன், இஸ்ரோ ரேடார் பிரிவு துணை இயக்குநர் வி.கே.ஆனந்தன், சென்னை வானிலை ஆய்வு மையரேடார் வல்லுநர் அருள் மலர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x