

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான 608 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை, முதல்வர் ஸ்டாலினிடம் விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சமர்ப்பித்தார். நாளை (ஆக. 29) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், அந்த அறிக்கையை முன்வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 டிசம்பர் 5-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா உயிரிழந்தார். பின்னர், சசிகலா, பழனிசாமி ஆகியோருக்கு எதிராகக் குரல் கொடுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் 2017-ல் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன. இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை, 2017 செப். 25-ம் தேதி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு அமைத்தது.
2016 செப். 22-ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் மற்றும் நிலைமை குறித்தும், அவர் உயிரிழந்த டிசம்பர் 5-ம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட அடுத்தடுத்த சிகிச்சைகள் குறித்தும் இந்த விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த காலகட்டத்தில் முக்கியப் பொறுப்புகள் வகித்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தீபாவின் தம்பி ஜெ.தீபக், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீடான வேதா இல்லத்தில் பணியாற்றிய சமையலர், ஜெயலலிதாவின் வாகன ஓட்டுநர் உள்ளிட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி, சாட்சியத்தைப் பதிவு செய்தது.
மேலும், ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் என 154 பேரிடம் விசாரணை நடத்தி, சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
விசாரணை முடிந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நீதிபதி ஆறுமுகசாமி நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 3 தொகுதிகள், 608 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணைய அறிக்கையை வரும் 29-ம் தேதி (நாளை) நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை முதல்வரிடம் நீதிபதி ஆறுமுகசாமி வழங்கியபோது, சட்டத் துறை அமைச்சர் எஸ்.இரகுபதி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு உடனிருந்தனர்.
பின்னர், ஆணையம் செயல்பட்டு வந்த சேப்பாக்கம் கல்சா மகாலில் செய்தியாளர்களிடம் ஆறுமுகசாமி கூறியதாவது:
ஜெயலலிதாவின் உடல்நிலை, அவரது பழக்க வழக்கங்கள், அவரை எப்படிப் பார்த்துக்கொண்டார்கள், யாரெல்லாம் அவரைக் கவனித்துக்கொண்டார்கள் என்பது குறித்தெல்லாம் விசாரித்து இருக்கிறேன்.
154 சாட்சிகளிடம் விசாரணை
நான் ஓராண்டு காலத்தில் மொத்தம் 154 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளேன். ஓர் ஆணையம் ஓராண்டில் 200 நாட்கள் வேலை செய்ய வேண்டும். நான் 150 நாட்கள் வேலை செய்திருக்கிறேன்.
சாட்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், ஒவ்வொரு சாட்சியின் பதிவும் அதிக பக்கங்களைக் கொண்டது. இது நீதிமன்றம் போலவே செயல்பட்டிருக்கிறது.
ஆணைய விசாரணைக்குத் தடை பெறுவது, வழக்குத் தொடர்வது போன்றவை, சம்பந்தப்பட்டவர்களின் உரிமை. நான் அதைத் தடுக்க முடியாது. இதெல்லாம் நடந்தபோது, நான் காத்திருந்தேன். எல்லாம் முடிந்த நிலையில் தற்போது அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறேன்.
விசாரணையில் நான் யாரையும் கட்டாயப்படுத்த வேண்டும் என்று கருதவில்லை. நாங்கள் விசாரணைக்கு சம்மன் கொடுக்கிறோம். வாய்ப்புத் தருகிறோம். அவர்கள் (சசிகலா) நான் வரவில்லை என்று எழுதிக் கொடுத்த பிறகு, நான் அவரை கட்டாயப்படுத்துவது சரியாக இருக்காது.
இந்த விசாரணை, எனக்கு மன நிறைவைத் தருகிறது. நான் வழங்கிய அறிக்கையில், எதையும் விட்டுவைக்க வில்லை. எல்லாவற்றுக்கும் பதில் அளித்திருக்கிறேன்.
ஜெயலலிதாவின் சிகிச்சையை எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவினர் 5 முறை பார்வையிட்டனர். அவரது மரணத்துக்குப் பிறகு 3 மாதம் கழித்துதான் 5 அறிக்கைகளை அவர்கள் தாக்கல் செய்தனர். இப்போது ஓர் அறிக்கை என மொத்தம் 6 அறிக்கைகளை எய்ம்ஸ் குழு தாக்கல் செய்துள்ளது.
இந்த சம்பவம் அரிதாக நடைபெற்றது. அதனால் இதற்குப் பரிந்துரை எதுவும் நான் கொடுக்கவில்லை. ஜெயலலிதாவை அவரது வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் சந்தேகத் தன்மை எதுவும் இல்லை. அதனால் வீட்டுக்கு சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று தோன்றவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளிவந்த நிலையில், எனக்கு சில யோசனைகள் தோன்றின. அவற்றை யெல்லாம் இந்த அறிக்கையில் சேர்த்து, அறிக்கையை நிறைவுசெய்து, முதல்வரிடம் சமர்ப்பித்திருக்கிறேன்.
அறிக்கையில் எனது கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை. சாட்சியங்கள் கூறியதைத்தான் தெரிவித்திருக்கிறேன். ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலர், பல கருத்துகளைத் தெரிவித்தனர். அவை எல்லாம் அறிக்கையில் இடம்பெறுமாறு பார்த்துக்கொண்டேன். விசாரணைக்கு, சசிகலா தரப்பு உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். இவ்வாறு நீதிபதி ஆறுமுகசாமி கூறினார்.