Published : 16 Oct 2016 09:05 AM
Last Updated : 16 Oct 2016 09:05 AM

மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலி எதிரொலி: பொழிச்சலூரில் சுகாதாரப் பணிகள் தீவிரம் - வீடு வீடாக அதிகாரிகள் ஆய்வு

பல்லாவரம் அருகே பொழிச் சலூரில் மர்ம காய்ச்சலுக்கு ஒரே வீட்டில் இரு குழந்தைகள் பலியான சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் லட்சுமி நகர் கண்ணகி தெருவைச் சேர்ந்த முகமது இதிரிஸ்ஸின் இரு குழந்தைகள் பாகிமா (8) முகமது (4) ஆகியோர் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தனர். இதனால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியது. இங்குள்ள தனியார் பள்ளியில் பாகிமா 3-ம் வகுப்பும் முகமது பிரிகேஜியும் படித்து வந்த நிலையில் கடும் காய்ச்சலால் இருவரும் அடுத்தடுத்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

ஒரே வீட்டில் இரு குழந்தைகளை பறிகொடுத்ததால் பெற்றோரும் உறவினர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடல்களை பெற்றுக்கொண்ட பெற்றோர், மகன் முகமது உடலை நேற்று முன்தினம் இரவு புரசைவாக்கத்தில் அடக்கம் செய்தனர்.

பாகிமாவின் உடலை மட்டும் நேற்று காலை வீட்டுக்கு கொண்டு வந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதி மசூதிகளில் பணிபுரியும் ஏராளமான இமாம்கள், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் உயிரிழந்த இருவரும் படித்த தனியார் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

சுகாதார துறை ஆய்வு

பொழிச்சலூர் பகுதியில் கடுமையான சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சைதாப்பேட்டை, காஞ்சிபுரம் சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள் பழனி, செந்தில்குமார் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறையினர் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் 100 பேர் பொழிச்சலூர் பகுதியில் தீவிர சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர். 14 நடமாடும் மருத்துவ வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

3 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன. இந்தப் பகுதியில் தொடர்ந்து 1 வாரம் தீவிர நோய் தடுப்புப் பணிகள் நடைபெறும் என சுகாதாரதுறையினர் தெரிவித்தனர்.

பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி கூறும்போது, ‘50 ஆயிரம் மக்கள் வசிக்கும் பொழிச்சலூர் பகுதியில் போதிய சுகாதாரப் பணிகள் நடைபெறவில்லை. 2 குழந்தைகள் ஒரே குடும்பத்தில் பலியான சம்பவம் பெரும் வேதனையை அளிக்கிறது. அரசு மெத்தனமாக செயல்படாமல் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

ஒரே குடும்பத்தில் அக்கா தம்பி மர்ம காய்ச்சலில் பலியான சம்பவம் பொழிச்சலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். பொழிச்சலூர் மக்கள் பீதியில் உள்ளனர். இதனை போக்க அரசு போர்க்கால அடிப்படையில் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்’ என்றார்.

சிறப்பு மருத்துவ முகாம்

சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனி கூறும்போது, ‘குழந்தைகள் எப்படி இறந்தார்கள் என மருத்துவமனையில் இருந்து அறிக்கை வந்த பிறகே தெரிவிக்க முடியும். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

சுகாதாரத் துறை ஊழியர்கள், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் இணைந்து 11 குழுக்கள் ஊராட்சி முழுவதும் வீடுவீடாகச் சென்று டெங்கு கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வாரம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும்

பொதுமக்கள் பயன் படுத்தி கொள்வதுடன் சுகாதாரப் பணி களுக்கு ஒத்துழைப்பு நல்கவேண் டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x