Published : 06 Jun 2014 08:20 AM
Last Updated : 06 Jun 2014 08:20 AM

சென்னையில் குப்பை மேலாண்மை திட்டங்கள்: என்ன செய்யப் போகிறது மாநகராட்சி?

சென்னையில் தினமும் வெளியாகும் 5,000 டன் குப்பையை முறையாக பதப்படுத்தவும், மறுசுழற்சிக்கு அனுப்பவும் சரியான திட்டமிடல் மாநகராட்சியிடம் இல்லை. ஒருபுறம் குப்பையை வீடுகளிலேயே தரம் பிரிப்பதுதான் சரியான முறை என்ற சில நிபுணர்கள் கூற, மறுபுறம் குப்பையை அப்படியே கொண்டு சென்று எரித்து விடுவதுதான் நல்லது என்று சிலர் கூறுகின்றனர்.

பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளின் கொள்ளளவு 2015-ம் ஆண்டுடன் முடியப் போகிற நிலைமையில் குப்பை மேலாண்மைக்கான எந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி கையில் எடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் தற்போது வெளியாகும் குப்பைகளில் பெரும் பகுதியை குப்பை கிடங்கில் அப்படியே கொட்டுவது மட்டுமே மாநகராட்சியின் வேலையாக இருக்கிறது. ஒரு சில இடங்களில் மட்டும் அதை பதப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

மக்கும் குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை புளியந்தோப்பில் அறிமுகப்படுத்தியது மாநகராட்சி. இதன்மூலம் நாளொன்றுக்கு 5 டன் குப்பையை பதப்படுத்தி, அதிலிருந்து மின்னுற்பத்தி செய்யலாம். சில இடங்களில், பிளாஸ்டிக் சாலைகள் போடுவது, குப்பையை தரம் பிரித்து கொடுப்பவர்களுக்கு ஒரு கிராம் தங்கம் கொடுப்பது உள்ளிட்ட திட்டங்கள் சில காலம் செயல்படுத்தப்பட்டன. இது தவிர சில வார்டுகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் குப்பையை வீடுகளிலேயே தரம் பிரித்து மறு சுழற்சிக்கு அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அவை சென்னையின் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து அமல்படுத்தப்படவில்லை.

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி கூறுகையில், “குப்பை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சியில் போதிய வல்லுநர்கள் இல்லை. குப்பையை வீடுகளிலேயே தரம் பிரிப்பதுதான் சரி என்று தெரிகிறது. ஆனால், அதற்கு மக்களிடமிருந்து 100 சதவீத ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவது கடினம். அதே நேரம், குப்பையை பதப்படுத்தும் நிலையங்களை அமைக்க, ஒப்பந்ததாரர் அனைத்து குப்பைகளும் வேண்டும் என்று கேட்கிறார். நாங்கள் எந்த திட்டத்தை மாதிரியாக எடுத்துக் கொள்வது என்பதில் குழப்பம் உள்ளது. திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை முறையில் பல தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், அது போல் சோதனை செய்யவும், சென்னையில் அதிக செலவாகும், ஆபத்தும் அதிகம். ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை கடைபிடிக்க ஆரம்பித்த பிறகு, அதில் கோளாறு இருப்பதாக தெரிந்தால், அதனை கைவிடுவது எளிதான காரியமாக இருக்காது” என்றார்.

’கிளீன் சென்னை’ என்ற பிரச்சாரத்தில் பங்காற்றிய க்ரியா நிறுவனத்தின் இணை நிறுவனர் சீனிவாசன் கூறுகையில், “நம் வீட்டிலிருந்து குப்பை வெளியேறினால் போதும் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அது எதிர்காலத்தில் அனைவருக்கும் ஆபத்தாக முடியும். எங்கள் வீட்டில் மக்கும் குப்பையை, ஒரு பூத்தொட்டியில் போட்டு அவற்றை உரமாக்கி விடுகிறோம். பிளாஸ்டிக் மற்றும் நாளிதழ்களை மறுசுழற்சிக்கு எடுத்துக் கொள்ளும் கடைகளுக்கு கொடுத்துவிடுகிறோம். எனவே, 80% குப்பை வெளியே செல்வதேயில்லை. ஏழை மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் இதை செய்வதற்கான வசதியும் நேரமும் இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், செய்யக் கூடிய வசதி இருப்பவர்கள் சலிக்காமல் இதை தொடர்ந்து செய்து வந்தால், குப்பையை கண்டிப்பாக குறைக்க முடியும். மழைநீர் சேகரிப்பை கட்டாயப்படுத்தியது போல், இதை உறுதிப்படுத்துவதற்கு மாநகராட்சி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றார்.

மதுரை தியாகராஜர் கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஆர். வாசுதேவன் பிளாஸ்டிக்கை கொண்டு சாலை போடும் திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறார். அவர் இது தொடர்பாக கூறுகையில், “திடக்கழிவில் 52% பிளாஸ்டிக்காக இருக்கிறது. அதுவும் பிளாஸ்டிக் பைகள், தேநீர் குவளைகள்தான் அதிகம். இவற்றை எந்த காரணம் கொண்டும் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லவோ, எரிக்கவோ கூடாது. பிளாஸ்டிக்கை பயன்படுத்தி சென்னை மாநகராட்சி சில இடங்களில் சாலைகளை போட்டு வருகிறது.

பிளாஸ்டிக் சாலைகள், மிக தரமாகவும், நீண்ட நாள் பழுதடையாமலும் இருக்கும். இதை எல்லா இடங்களிலும் செய்தால், குப்பையை குறைக்க முடியும். ஆனால், அதற்கு வீடுகளிலேயே தரம் பிரிப்பது மிக முக்கியம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x