

தீபாவளி பண்டிகையையொட்டி கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கங்களில் தயாரிக்கப்பட்ட அனைத்து விதமான ரகங்களையும் கொண்ட பட்டுச் சேலைகள், காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பெரியார்தூண் அருகே தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கண்காட்சியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதில், காஞ்சிபுரம், திருபுவனம் மற்றும் ஆரணி பட்டுச் சேலைகள், கோவை மென் பட்டு, கோரா காட்டன் சேலைகள், பரமக்குடி பருத்தி சேலைகள், திண்டுக்கல் பம்பர் சேலைகள், மதுரை சுங்குடி சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், ஈரோடு மற்றும் சென்னிமலை போர்வைகள் உட்பட பல்வேறு தரை மற்றும் மெத்தை விரிப்பான்கள் இடம் பெற்றுள்ளன.
சேலம் வெண்பட்டு வேட்டிகள் ரூ.2,800 முதல் ரூ.9 ஆயிரம் வரையிலான ரகங்களில் உள்ளன. காட்டன் சேலைகள் ரூ.800 முதல் ரூ.1,800 வரையிலான ரகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
கண்காட்சியில் இடம் பெற்றுள்ள போர்வைகளுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப் படுவதாக கைத்தறி பட்டுக் கூட்டுறவு சங்கம் தெரிவித் துள்ளது.
இதுகுறித்து, கைத்தறித் துறை இணை இயக்குநர் கூறியதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு தள்ளுபடியில் கண்காட் சியுடன் பட்டுச் சேலைகள் விற்பனை செய்யப்படுகிறது.
இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான பட்டுச் சேலை ரகங்களும் இடம் பெற்றுள்ளன.
அனைத்து ரகங்களுக்கும் 30 முதல் 55 சதவீதம் வரையில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சி மூலம் ரூ.70 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 27-ம் தேதி வரை நடைபெறும் என்று அவர் கூறினார்.