

சிப்பெட் நிறுவனத்தின் தலைமையிடத்தை சென்னையிலிருந்து டெல்லிக்கு மாற்றக்கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்திய அரசு 1968 ஆம் ஆண்டு சென்னை, கிண்டியில் சிப்பெட் (CIPET) என்கிற மத்திய பிளாஸ்டிக்ஸ் பொறியியல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை நிறுவியது. இன்று இந்தியா முழுவதும் 28 கிளைககளை கொண்டுள்ள இந்நிறுவனம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. நமது நாட்டின் தலைசிறந்த கல்வி நிலையமான சிப்பெட் - பட்டம், பட்டயப் படிப்புகளுக்கான இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளின் சான்றிதழ்களை வழங்கி வருகிறது.
மேலும் பிளாஸ்டிக்ஸ் தொழிற்சாலைகளுக்குத் தேவையான தொழில் நுட்ப ஆலோசனைகளை ஆராய்ச்சிக்கு அளித்து, உற்பத்திக்கு உறுதுணையாக இருந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு - பிளாஸ்டிக் துறையில் மகத்தான பங்கை ஆற்றி வருகிறது. சிப்பெட்டில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களின் அயராத, அர்ப்பணிப்பு உணர்வால் இன்றைக்கு சுயசார்பு தன்மையை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிப்பெட்டின் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் அதன் லாபத்திலிருந்து ஒரு கணிசமான தொகை சேமிக்கப்பட்டு மத்திய அரசின் உதவியை நாடாமல் அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
இவ்வாறு சென்னை, கிண்டியில் லாபகரமாக இயங்கி வரும் சிப்பெட் தலைமை அலுவலகத்தை டெல்லிக்கு மாற்ற தற்போது மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் தமிழகத்தை தலைமை இடமாகக் கொண்ட ஒரு தலைசிறந்த சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு இடம் மாற்றுவதற்கு அனைத்து தொழிலாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் ஒட்டுமொத்தமாக நியாயமான எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்.
நேற்றைய தினம் சிப்பெட் ஒருங்கிணைந்த ஊழியர்கள் சங்கத்தினர் என்னை நேரில் சந்தித்து சிப்பெட் நிறுவனம் சென்னையிலேயே இயங்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை என்னிடம் தெரிவித்தார்கள். நான் அவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் ரசாயன மற்றும் உரத்தொழிற்துறை அமைச்சருக்கு சிப்பெட் நிறுவனம் சென்னையிலேயே தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருக்கின்றேன்.
மேலும் 1999 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி புரிந்த போது சிப்பெட் தலைமை இடத்தை இடம் மாற்றம் செய்யும் முயற்சியை அவர்களே கைவிட்டதோடு, இனி வருங்காலத்தில் இது போன்ற முயற்சியை மேற்கொள்ள மாட்டோம் என்று உறுதி அளித்ததை இன்றைய மத்திய பாஜக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே மத்திய அரசு சிப்பெட் நிறுவனத்தின் தலைமை இடத்தை சென்னையிலிருந்து இடம் மாற்றம் செய்யக்கூடாது'' என்று வாசன் கூறியுள்ளார்.