Published : 12 Oct 2016 09:08 AM
Last Updated : 12 Oct 2016 09:08 AM

ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு: அக்.15-ம் தேதி தமிழக எல்லைக்கு வரும்

சென்னை குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளது. வரும் 15-ம் தேதி தமிழக எல்லைக்கு தண்ணீர் வரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.

சென்னை குடிநீர் தேவைக்காக தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல், அக்டோபர் 31-ம் தேதி வரை 8 டிஎம்சி தண்ணீரும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டிஎம்சி தண்ணீரும் என மொத்தம் 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை இரு கட்டங்களாக கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடுகிறது ஆந்திர அரசு.

ஆனால், தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, கடந்த 1996-ம் ஆண்டு முதல் கண்டலேறு அணையிலிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீர், முதல் முறையாக கடந்த ஆண்டு திறந்து விடவில்லை. தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் ஆந்திர அணைகளில் போதிய அளவு நீர் இருப்பு இல்லை என ஆந்திர அரசு அப்போது காரணம் கூறியது.

அதேநேரத்தில், கடந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ததால், சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் நிரம்பி வழிந்தன. இதனால், கிருஷ்ணா நதி நீர் வராத நிலையிலும் சென்னையில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படவில்லை. மேலும் கிருஷ்ணா நீருக்கான அவசியமும் எழவில்லை.

இந்நிலையில், ஆந்திர அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை எனக்கூறி நடப்பு ஆண்டுக்கான முதல் தவணை நீரை ஜூலை 1-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு திறக்கவில்லை.

சென்னையின் குடிநீருக்கு தண்ணீர் எடுப்பதன் மூலம் அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் கணிசமாக குறைந்தது. இதன்படி பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் கொள்ளளவான 11 ஆயிரத்து 057 மில்லியன் கன அடியில் தற் போது, வெறும் 1,691 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது.

தமிழக அரசு கோரிக்கை

இந்நிலையில், ஆந்திர பகுதிகளில் கடந்த மாதம் கொட்டித் தீர்த்த கனமழையால், தற்போது ஆந்திராவில் உள்ள சைலம் மற்றும் சோமசீலா அணை, கண்டலேறு அணை களில் போதிய நீர் நீர் இருப்பு உள்ளது. இதனால், கிருஷ்ணா நீரை திறக்குமாறு தமிழக அரசின் பொதுப்பணித்துறை ஆந்திர அரசைக் கேட்டுக்கொண்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்று சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீரை, நேற்று முன்தினம் கண்டலேறு அணையிலிருந்து ஆந்திர அரசு திறந்துள்ளது. நேற்று முன் தினம் மாலை 3.40 முதல் வினாடிக்கு 200 கன அடி வீதம் கண்டலேறு அணையிலிருந்து, நீர் திறக்கப்பட்டுள்ளது. பின்னர் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும்.

இந்த நீர் கண்டலேறு அணையிலிருந்து 152 கிமீ தொலைவில் உள்ள தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வரும் 15-ம் தேதி வந்தடையும். பிறகு, அங்கிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு 16-ம் தேதி வந்தடையும் என தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 142 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருக்கும் நிலையில், கிருஷ்ணா நதி நீர் வருகையால், அடுத்த வாரம் நீர் இருப்பு கணிசமாக உயரும். மேலும் சென்னையின் குடிநீர் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்கிறார் கள் பொதுப்பணித் துறை அதிகாரிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x