

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதி களும் நேற்று பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 54 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள நீதிபதிகள் பணியிடம் 75. இதில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலுடன் சேர்த்து 39 நீதிபதிகள் பணியில் இருந் தனர். காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக வி.பார்த்திபன், ஆர்.சுப்பிரமணியன், எம்.கோவிந்த ராஜ், எம்.சுந்தர், ஆர்.சுரேஷ் குமார், ஜே.நிஷாபானு, எம்.எஸ்.ரமேஷ், எஸ்.எம்.சுப்பிரமணியம், அனிதா சுமந்த், ஏ.எம்.பஷீர் அகமது, டி.ரவீந்திரன், எஸ்.பாஸ் கரன், பி.வேல்முருகன், ஜி.ஜெய சந்திரன், சி.வி.கார்த்தி கேயன் ஆகியோர் நியமிக்கப் பட்டனர்.
54 ஆக உயர்ந்துள்ளது
புதிய நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. 15 நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் முறைப்படி பதவிப்பிரமாணம் செய்து வைத் தார். இதன்மூலம் உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பதவியேற்பின்போதே தனது சொத்துப்பட்டியல் விவரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித் தார். ஏற்கெனவே நீதிபதி கே.சந்துரு தனது பதவியேற்பின்போது சொத்துப்பட்டியல் வெளியிட்ட முதல் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு விழாவில் பேசிய அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசுவாமி, ‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது முறையாக அதிக எண்ணிக்கையில் தற்போது 15 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள பணியிடங்களையும் விரைவில் நிரப்பினால் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண் ணிக்கை வெகுவாக குறையும்’’ என்றார்.
வழக்கறிஞர் சங்க நிர்வாகி களும் புதிய நீதிபதிகளை வாழ்த்திப் பேசினர். புதிதாக பதவியேற்ற நீதிபதிகள், நேற்று மதியமே வழக்குகளை விசாரித்தனர்.
விழா முடிவில் நிருபர்களிடம் பேசிய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ‘‘உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் தற்போது 15 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து தற்போது 54 நீதிபதிகள் பணியில் உள்ளனர். மீதமுள்ள 21 காலிப் பணியிடங்களையும் விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.