

சென்னை: தந்தை இறந்த நிலையில், வயதான தாயை தவிக்க விட்டுவிட்டு அமெரிக்கா செல்ல முயன்ற மகனை போலீஸார் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதோடு மட்டுமல்லாமல், மூதாட்டியின் பராமரிப்பு செலவுக்காக மகனிடமிருந்து ரூ.8 லட்சம் பெற்றுக் கொடுத்து பாராட்டை பெற்றனர்.
சென்னை மயிலாப்பூர் கேசவப் பெருமாள் கோயில் மேற்குத் தெருவை சேர்ந்தவர் துர்காம்பாள் (74). இவரது கணவர் குப்புசாமி (90). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் என 3 பிள்ளைகள் இருந்த நிலையில் மூத்த மகன் 2 ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகிவிட்டார். கடந்த மாதம் 3-ம் தேதி வயது முதிர்வு காரணமாக குப்புசாமி மரணம் அடைந்தார்.
அமெரிக்காவில் உள்ள துர்காம்பாளின் இளைய மகன் ராமகிருஷ்ணன் தந்தையின் இறுதிச் சடங்குக்கு வரவில்லை. குடும்ப வழக்கப்படி நடைபெறும் சடங்குக்காக மட்டும் 10 நாட்களுக்கு பிறகு ராமகிருஷ்ணன் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்துள்ளார். பின்னர், தனது தாயுடன் சென்று தந்தைக்கான இறுதிச் சடங்குகளை செய்துள்ளார்.
பின்னர் துர்காம்பாள், “நீ நல்ல வசதியுடன் இருக்கிறாய். இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எனக்கு துணையாக இருந்த அப்பாவும் காலமாகிவிட்டதால், நானும் உன்னுடன் அமெரிக்கா வருகிறேன். இல்லையென்றால், தேனாம்பேட்டையில் உள்ள உனது அக்கா வீட்டின் அருகில் தங்குவதற்கு ஏற்பாடு செய்துகொடு. கூடவே செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு செல்” என மகனிடம் உருக்கமாக வேண்டியுள்ளார்.
தாயை அழைத்துச் செல்ல விரும்பாத மகன் ராமகிருஷ்ணன், “உங்களை சென்னையில் உள்ள ஏதாவது ஓர் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு செல்கிறேன்” என பதில் அளித்துள்ளார். இதையறிந்த ராமகிருஷ்ணனின் சகோதரி, தாய் துர்காம்பாளை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், மயிலாப்பூர் காவல் நிலையம் அழைத்துச் சென்றார். அங்கு துர்பாம்பாள், கண்ணீர் மல்க நடந்த நிகழ்வுகளை கூறி புகார் அளித்தார்.
புகார் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையர்திஷா மிட்டல் உத்தரவிட்டார். இதையடுத்து மயிலாப்பூர் போலீஸார் மூத்த குடிமக்கள் பெற்றோர் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ராமகிருஷ்ணன் அமெரிக்கா செல்வதைத் தடுக்கவிமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில் ராமகிருஷ்ணன் அமெரிக்கா செல்வதற்காக கடந்த 22-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் சென்னை விமான நிலையம் சென்றுள்ளார். அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வுசெய்தபோது, அவரது பெயரில்மயிலாப்பூர் போலீஸார் ‘லுக்அவுட்’ நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டிருப்பதை அறிந்தனர்.
இதையடுத்து விமான நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மயிலாப்பூர் போலீஸாருக்கு தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது. மயிலாப்பூர் போலீஸார் விமான நிலையம் சென்று ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.பின்னர், அவரை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் சுப்பிரமணி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அடுத்தடுத்த நிகழ்வுகளால் அதிர்ந்து போன ராமகிருஷ்ணன், வயதான தனது தாயாருக்கு ரூ.8 லட்சம் கொடுப்பதாக உறுதியளித்தார். இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட், ராமகிருஷ்ணனை சிறைக்கு அனுப்பாமல், ஜாமீனில் விடுவித்தார்.
தள்ளாடிய தாய், அவரை தவிக்கவிட்டு அமெரிக்கா செல்ல முயன்ற மகன் விவகாரத்தில், விரைவாகவும் மனித நேயத்துடனும் செயல்பட்டு மூதாட்டிக்கு நியாயம் பெற்றுக் கொடுத்த போலீஸாரை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் பொது மக்கள் வெகுவாக பாராட்டினார்.