

‘காவலர் வீர வணக்க நாளை’ முன்னிட்டு, நேற்று தமிழக காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில், சீனப் படையினர் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் மத்திய பாதுகாப்புப் படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அக்டோபர் 21-ம் தேதி ‘காவலர் வீர வணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.
இதன்படி நேற்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழக காவல்துறை டிஜிபி அலுவலக வளாக காவலர் நினைவுச் சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில், கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து இந்தாண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஓராண்டில் நாடு முழுவதும் பணியின் போது வீர மரணமடைந்த 473 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, முப்படைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஜக்பீர் சிங், ராஜன் பர்கோத்ரா, ஜே.சுரேஷ், மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், முன்னாள் டிஜிபியுமான எம்.கே.நாராயணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி கி.ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், டிஜிபி (பயிற்சி) கே.பி.மகேந்திரன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்குநர் ஆர்.சி.குடவாலா, கூடுதல் டிஜிபிக்கள் விஜய்குமார் (சிறைத்துறை), சுனில்குமார் சிங் (சீருடை பணியாளர் தேர்வாணயம்), முகமது ஷகீல் அக்தர் (காவலர் வீட்டு வசதி வாரியம்), ஏ.கே.விஸ்வநாதன் (ஊர்க்காவல் படை), சென்னை மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி மற்றும் காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன், பணியில் இருந்தபோது உயிரிழந்தோரின் பெயர்களையும், அவர்கள் பணிகளையும் நினைவு கூர்ந்தார். பின் துப்பாக்கி குண்டுகள் முழங்க காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், காவல்துறை உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.