

ராமேசுவரம்: தமிழகத்தில் முதன்முறையாக ராமேசுவரம் அருகே மன்னார் கடல் பகுதியில் பெருங்கடல் மீன் இனமான எண்ணெய் மீன் மீனவர் வலையில் சிக்கியது.
பாம்பனில் நேற்று கரை திரும்பிய விசைப்படகு மீனவர்கள் வலையில் எண்ணெய் மீன் (oil fish) என்ற அரிய வகை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் 4 கிலோ எடையும், இரண்டரை அடி நீளமும் இருந்தது. மன்னார் வளைகுடா கடல்பகுதியில் முதன்முறையாக இந்த மீன் பிடிபட்டதால் பாம்பன் மக்கள் இந்த மீனை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இது குறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய மீனை ஆங்கிலத்தில் எண்ணெய் மீன் என்று அழைப்பர். இந்த மீனின் சதைப் பகுதி எண்ணெய் மற்றும் மெழுகு போன்று இருப்பதால் எண்ணெய் மீன் என்று பெயர் உண்டானது.
இந்த மீன் சாப்பிட சுவையாக இருந்தாலும் சிலருக்கு வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி ஏற்படும். ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் எண்ணெய் மீன்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக எண்ணெய் மீனின் ஒத்த ரகமான எஸ்கோலர் (Escolar) என்ற மீனை, கடந்த 24.6.2016 அன்று அந்தமான் தீவு கடல் பகுதியில் லாங்லைனர் மீன்பிடி மீனவர்களால் முதன்முறையாக பிடிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் முதன்முறையாக எண்ணெய் மீன், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீனவர் வலையில் சிக்கியது என்றார்.