

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். வழக்கறிஞர்களும் தங்கள் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முன்வர வேண்டும். அதற்கு நீதிபதிகள் தயாராக உள்ளனர் என தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற கிளையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தலைமை நீதிபதி பங்களா உட்பட 6 நீதிபதிகள் பங்களாக்கள், நீதிமன்ற நிர்வாகக் கட்டிடத்தின் கிழக்கு, மேற்கு பகுதிகளில் நீதிமன்றத் துக்கு வருவோரை சோதனையிடும் மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவற்றை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் திறந்துவைத்து பேசியதாவது:
புதிதாக 15 நீதிபதிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் உயர் நீதிமன்ற கிளைக்கு நியமனம் செய்யப்படுவர். தற்போது 2 அமர்வுகள் செயல்படுகின்றன. இனிமேல் 3 அமர்வாக உயர்த்தப் படும். உயர் நீதிமன்ற கிளையில் 16 நீதிமன்ற அறைகள், 16 நீதிபதிகள் அறைகள் உள்ளன. தனியாக 3 நீதிபதிகள் அறைகள் கட்டப்படும். மேலும் புதிதாக 9 நீதிபதிகள் பட்டியல் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்த 9 பேரும் பதவியேற்ற பின்னர் உயர் நீதிமன்ற கிளைக்கு கூடுதல் நீதிபதிகள் நியமனம் செய்யப் படுவர்.
உயர் நீதிமன்றத்தில் தற்போது நீதிபதிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், வழக்கை விசாரித்து முடிப்பது விரைவாக நடைபெற்று வருகிறது. நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. அவற்றை விசாரித்து முடிக்க அதிக காலம் தேவை.
எந்தப் பிரச்சினையாக இருந் தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். வழக்கறிஞர்கள் தங்கள் பிரச்சினைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முன்வர வேண்டும். அதற்கு நீதிபதிகள் தயாராக உள்ளனர் என்றார்.
உயர் நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி எஸ்.நாகமுத்து, நீதிபதிகள் எஸ்.விமலா, எஸ்.எஸ்.சுந்தர், பி.கோகுல்தாஸ், எம்.வி.முரளிதரன், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், அட்வகேட் ஜெனரல் பி.புகழேந்தி, உதவி சொலி சிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமி நாதன், பார் அசோசியேஷன் தலைவர் சுபாஷ்பாபு, நிர்வாகிகள் வேல்கனிராஜ், என்.இளங்கோ, பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கிருஷ்ணவேனி, அரசு வழக்க றிஞர்கள் கோவிந்தன், ராஜாகார்த்தி கேயன், ஜனார்த்தனன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக உயர் நீதிமன்ற கிளையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு சிஐஎஸ்எப் வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.