

சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தினமும் வதந்திகள் பரப்பப்பட்டு வரு கின்றன. வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்தது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழச்சி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து சர்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார். இது அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழச்சி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அதிமுக தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் மனு அளித்தார்.அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் கிளாட்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக தமிழச்சி மீது, கலகம் விளைவிக்க தூண்டு தல்(153), பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் விதமாக அறிவிப்புகளை வெளியிடுதல் (505(1)), பொதுமக்களை குற்றத்தில் ஈடுபட தூண்டுதல் (505(11) (B)(C) ஆகிய 3 பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘தமிழச்சி மீது நேரிலும், ஆன்லைன் மூலமும் இதுவரை சுமார் 70 புகார்கள் வந்துள்ளன. ஆரம்பகட்ட விசாரணை முடிந்த பிறகு, தமிழச்சியை கைது செய்ய வேண்டுமா என்பது குறித்து பின்னர் முடிவு செய்வோம்’’ என்றனர்.