Published : 26 Aug 2022 07:17 PM
Last Updated : 26 Aug 2022 07:17 PM
மதுரை: ‘‘சீனாவுக்கு நிகராக நம்மால் தரமான பசுமைப் பட்டாசுகளை தயாரிக்க முடியும்’’ என்று மதுரையில் இன்று நடந்த இந்திய பொறியாளர்கள் பசுமைப் பட்டாசு உற்பத்தி மாநாட்டில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தார்.
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு உணவக தங்குவிடுதியில் இந்திய பொறியாளர்கள் சங்கம் சார்பில் பசுமை பட்டாசு உற்பத்தி தொடர்பாக 36-வது தேசிய அளவிலான மாநாடு இன்று தொடங்கியது. நாளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் தேசிய அளவிலான பசுமைப் பட்டாசு தொழில்நுட்பம் மற்றும் அதன் மாசு விளைவுகள் குறித்த கலைந்துரையாடப்பட்டு வருகிறது.
இன்று தொடக்க விழாவில் இந்திய பொறியாளர்கள் சங்க தலைவரும், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியுமான சிவசுப்ரமணியன், தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், ஓசூர் தனியார் இன்ஜினிரிங் கல்லூரி முதல்வர் பொறியாளர் ரெங்கநாத், பொறியாளர்கள் ராஜகோபால், ராமகிருஷ்ணன் மற்றும் மாசு கட்டுப்பாட்டு மைய நிர்வாகிகள், வல்லுநர்கள், பட்டாசு பொருட்கள் வேதிய பொருட்கள், பேராசிரியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்ரமணியன் கூறியது: "சீனாவில் தாதுப் பொருட்களுடன் விதவிதமாக வேதிப் பொருட்களை சேர்த்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகையான பட்டாசுகளை தயாரிக்கின்றனர். அவர்கள் பேரியம் நைட்ரேட், பேரியம் குளோரைடு, பேரியம் பாஸ்பேட் போன்ற வகைகளில் பட்டாசுகளை உருவாக்கி வருகின்றனர். சீனாவில் தொழிலாளர்கள் அதிகம் உள்ளதால் அவர்களால் உற்பத்தி அதிகம் செய்ய முடிகிறது. அவர்கள் அளவிற்கு தரமான பட்டாசுகளை நம்மால் தயாரிக்க முடியும். ஆனால், நம்மிடம் மூலப்பொருட்கள் இல்லாத நிலையில் அவர்களுக்கு இணையான உற்பத்தியை செய்ய முடியாது.
பசுமைப் பட்டாசு உற்பத்தி தொடங்கினால் பட்டாசு ஆலை விபத்துகள் குறைந்து பாதுகாப்பானதாக மாறும். சீனப் பட்டாசு வருகை குறையும். பசுமைப் பட்டாசு தயாரிப்பில் தற்போது இந்தியாவில் திறமைவாய்ந்த தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றனர். முலப்பொருட்களை வேதிப் பொருட்களாக மாற்றும் நடவடிக்கைகளில் இந்தியாவில் சுணக்கம் காட்டுகின்றனர். வெளிநாட்டு பாஸ்பரஸ் மீதான வரிக்குறைப்பால் விலை குறைவாக கிடைக்கிறது. வெளிநாட்டு பாஸ்பரஸ்சும், இந்தியாவில் உற்பத்தியாகும் பாஸ்பரசும் ஓரே விலைக்கு கிடைக்க இந்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். அதற்கான வரிவிதிப்பு கட்டமைப்பை மாற்றும் பணிகள் நடைபெறுகிறது.
மனிதன் மற்றும் ஓசோன் படலத்தை பாதிக்கும் பேரியம், பெர்குளோரைடு ரசாயனங்களுக்கு மாற்றாக போரான், போரான் அயோடின், நைட்ரேட் அயணிகளை படுத்தி பசுமை பட்டாசை உருவாக்குவதற்கான ஆய்வுகளை இந்த மாநாட்டில் பரிந்துரைக்கவுள்ளோம்.
சீனாவில் பல்வேறு வகையான மூலக்கூறுகளை பயன்படுத்தி பல்வேறு வகையான வண்ணங்களில் பட்டாசுகளை தயாரிப்பதால் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. வரும் காலங்களில் சீனாவிற்கு நிகராக அனைவரையும் கவரும் வகையிலான பல்வேறு வகை பசுமைப் பட்டாசுகளை உருவாக்குவோம்” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment