Published : 26 Aug 2022 01:17 PM
Last Updated : 26 Aug 2022 01:17 PM

திருச்சி சந்திப்பில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.100 கோடியில் புதிய பாலம்

ஜி.செல்லமுத்து

திருச்சி: திருச்சி ஜங்ஷன் பழைய பாலத்துக்குப் பதிலாக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.100 கோடியில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் தெற்கு ரயில்வேயின் கட்டுமானப் பிரிவு ஈடுபட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் பழைய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால், இதற்கு தீர்வு காணும் வகையில் ரூ.81.4 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014 மார்ச் மாதம் தொடங்கியது. இதில், அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பேருந்து நிலைய பகுதி, ஜங்ஷன் ரயில் நிலையம், எடமலைப்பட்டி புதூர் சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன.

இதில், சென்னை-மதுரை சாலையை இணைக்கும் வகையில் மன்னார்புரம் பகுதியில் ராணுவத்துக்குச் சொந்தமான இடத்தைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், அந்தப் பகுதியில் மட்டும் பாலம் அமைக்கும் பணி இன்னும் முடிவடையாமல் உள்ளது.

தற்போது ராணுவ அமைச்சகம் இடம் வழங்கியதைத் தொடர்ந்து,விடுபட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் இன்னும் ஓராண்டுக்குள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய மேம்பாலம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பிறகு, ஜங்ஷன் பழைய பாலத்துக்குப் பதிலாக மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.100 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் தெற்கு ரயில்வேயின் கட்டுமானப் பிரிவு ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு அதிகாரி ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: ”ஜங்ஷன் புதிய மேம்பாலத்தில் மன்னார்புரம் இணைப்புச் சாலைப் பணி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையால் பழைய பாலத்துக்குப் பதில் புதிய பாலம் கட்ட முன்கூட்டியே ரயில்வே வாரியத்திடம் அனுமதி பெறுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ரூ.100 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள இப்பணியில் மாநில அரசின் பங்களிப்பு 50 சதவீதம் இருக்கும். இப்பணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து ஓராண்டுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x