

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு காரணமாக இன்று (வெள்ளி) காலை முதல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை அறிவித்துள்ளது.
பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று (வியாழன்) காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக இருந்தது. பின்னர் மாலையில் இது வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இந்நிலையில் இன்று (வெள்ளி) காலை அளவீட்டின் போது நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்திருந்தது. எனவே, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை அறிவித்துள்ளது.
அதேபோல், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆறு, அருவி உள்ளிட்ட பகுதிகளில் குளிக்கவும், ஆற்றைக் கடக்கவும், கால்நடைகளை ஆற்றை கடந்து அழைத்துச் செல்லவும், மீன்பிடிக்கும் பணியில் ஈடுபடவும், ஆற்றோரங்களில் துணி துவைக்கவும் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவிரி ஆற்றோர பகுதிகளில் நின்று செல்ஃபி எடுப்பது, புகைப்படங்கள் எடுப்பது ஆகியவற்றிற்கும் மாவட்ட நிர்வாகம் தடை அறிவித்துள்ளது.. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.