

மதுரை: ஓபிஎஸ், அதிமுக தொண்டர்களை விலை பேசும் யுத்தத்தை தொடங்கியுள்ளதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுகவை எம்ஜிஆர். ஏழை எளிய மக்களுக்காக 17.10.1972 ஆம் ஆண்டு தொடங்கினார் தற்போது 50 ஆண்டு விழா காணும் அரசியல் பயணத்தில் ஜெயலலிதா மூன்றாம் பெரிய இயக்கமாக உருவாக்கி வரலாறு படைத்தார்.
அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை இழந்து, அரசியல் எதிர்காலத்தை தொலைத்து விட்டு, ஆதரவு இல்லாமல் நிற்கின்ற ஓபிஎஸ் தனக்கு செல்வாக்கு இருப்பதாக காட்டிக் கொள்ள மவுன யுத்தத்தை தொடங்கியவர் தற்போது விலை பேசும் யுத்தத்தை தொடங்கியுள்ளார்,
தன்னுடைய செல்வாக்கை காட்டிக்கொள்ளும் முயற்சி அவருக்கு பின்னடைவைத்தான் தரும், அதிமுகவில் விசுவாசமுள்ள தொண்டர்கள் உள்ளனர் பதவி, பணம் என்று விலைபேசி தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர் ஓபிஎஸ்ஸும் அவரது புதல்வர்களும். தொண்டர்கள் ஆதரவைப் பெற பதவி, பணம் என்று விலைபேசி வரும் நடவடிக்கைகள் தொண்டர்களை வேதனை அடையச் செய்துள்ளது,
தொலைத்துவிட்ட செல்வாக்கை மீண்டும் பெற முயற்சி செய்ய தொண்டர்களை தவறாக எடை போட்டு விடாதீர்கள், நீங்கள் விடும் அழைப்பு ஒவ்வொன்றும் உங்களுக்கு பின்னடவை தந்து கொண்டிருக்கும், நீங்கள் விலை பேசும் வியாபார தந்திரத்தை கவலையும், வேதனையும் அளிப்பதாக தொண்டர்கள் பேசுகிறார்கள்,
தொண்டர்களின் ஆதரவைப் பெற, தன் சுயநலத்தால் ஆசை வார்த்தை கூறி பேரம் பேசுவது உங்களுக்கு தரம் தாழ்ந்த செயலாகும், சுயநலத்தால் எதிலும் வெற்றி பெற முடியாது.
எடப்பாடியாருக்கு மக்கள் செல்வாக்கு, தொண்டர்கள் செல்வாக்கு இருப்பதால்தான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 93,802 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், ஆனால் நீங்கள் தொண்டர்கள், மக்கள் நம்பிக்கை பெறதாதால் 11,201 வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றீர்கள்.
234 சட்டப்பேரவை தொகுதிகளில் எடப்பாடியார் சூறாவளி சுற்றுப் பயணம் செய்ததால் 33.29 வாக்கு சதவீதத்தை பெற்று தந்து அதிமுகவின் வாக்கு வங்கியை தக்க வைத்தார். இதில் அவருக்கு எந்த சுயநலமும் இல்லை, பொதுநலத்துடன் தான் செயல்பட்டார் என்பதற்கு சாட்சி,
நான் ஓபிஎஸ் அவர்களை காயப்படுத்துவதற்காக சொல்லவில்லை, உண்மையைதான் சொல்லுகிறேன், எடப்பாடியாரின் சீர்திருத்த முடிவுக்கு ஒன்னரை கோடி தொண்டர்கள் உள்ளனர்
யாரையும் விலை பேசினாலும் அவர்கள் விசுவாச தொண்டர்களாக இருக்க மாட்டார்கள் நீங்கள் செய்யும் நடவடிக்கையால் வரலாறு உங்களை மன்னிக்காது'' என்று கூறப்பட்டுள்ளது.