Published : 26 Aug 2022 07:16 AM
Last Updated : 26 Aug 2022 07:16 AM

1,000 ஸ்பின்னிங் மில்களில் வாரம் 2 நாட்கள் விடுமுறை: பஞ்சு விலை உயர்வால் தமிழக ஜவுளித் துறையில் நடைமுறை

கோவை: பஞ்சு விலை உயர்வால் தமிழகத்தில் 1,000 ஸ்பின்னிங் மில்கள் வாரத்தில் 2 நாட்களுக்கு மூடப்படுவதாக ஜவுளித் துறையினர் தெரிவித்தனர்.

நூல் உற்பத்திக்கான மூலப் பொருளான பஞ்சு, ஆண்டுதோறும் இந்தியாவில் சராசரியாக 350 லட்சம் பேல் (ஒரு பேல் 170 கிலோ பஞ்சு) உற்பத்தி செய்யப்படும். இதில் 50 லட்சம் பேல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

இவ்வாண்டு பஞ்சு உற்பத்தி குறைந்துள்ளது. தவிர பல்வேறு காரணங்களால் பஞ்சு விலை அதிகரித்து வருகிறது. நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் தமிழகத்தில் 1,000 ஸ்பின்னிங் மில்கள் வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுமுறை அளிக்க தொடங்கியுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் கூறியதாவது: இவ்வாண்டு 310 லட்சம் பேல்கள் பஞ்சு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் 40 லட்சம் பேல் ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டது.

பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத வரியை மத்திய அரசு நீக்கியுள்ள காரணத்தால் பஞ்சு விலை குறையத் தொடங்கியது. இருப்பினும் துறைமுகங்களில் நெரிசல் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பஞ்சு உரிய காலத்தில் இந்திய மில்களுக்கு கிடைப்பதில்லை.

போட்டியிட முடியவில்லை

தற்போது பஞ்சு விலை ஒரு கேண்டி (356 கிலோ) ரூ.1.02 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. பாகிஸ்தானில் ரூ.65,000 முதல் ரூ.68,000 வரையும், சீனாவில் ரூ.70,000 முதல் ரூ. 72,000 வரையும் மட்டுமே ஒரு கேண்டி பஞ்சு விற்பனை செய்யப்படுகிறது. நம் நாட்டில் பஞ்சு அதிக விலை உள்ள காரணத்தால் சர்வதேச சந்தையில் போட்டியிடும் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உடனடியாக பஞ்சு விலை குறைய ‘எம்சிஎக்ஸ்’ என்ற மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ் டிரேடிங் பட்டியலில் இருந்து பஞ்சை வரும் நவம்பர் வரை நீக்க வேண்டும். பஞ்சு இறக்குமதிக்கு தற்போது வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் வரை வழங்கியுள்ள இந்த சலுகையை டிசம்பர் வரை நீட்டிக்க வேண்டும்.

மத்திய அரசு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டால் பஞ்சு விலை ஒரு கேண்டி 15,000 ரூபாய் வரை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

தென்னிந்திய நுாற்பாலைகள் சங்கம் (சிஸ்பா) கவுரவ செயலாளர் ஜெகதீஷ் கூறியதாவது:

‘எம்சிஎக்ஸ்’ டிரேடிங் கூடாது

உள்நாட்டு தேவை போக மட்டுமே பஞ்சு ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும். ‘எம்சிஎக்ஸ்’ டிரேடிங் பட்டியலில் பஞ்சை நிரந்தரமாக நீக்க வேண்டும். சீனாவைபோல் இந்தியாவிலும் பன்னாட்டு நிறுவனங்கள் பஞ்சு இருப்பு வைத்து விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது. யூகத்தின் அடிப்படையில் விலை ஏற்றப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இவற்றை செய்தால் இந்தியாவில் பஞ்சு விலை உடனடியாக குறையும்.

பஞ்சு விலை உயர்வு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் தமிழகத்தில் 1,000 ஸ்பின்னிங் மில்கள் வாரத்தில் 2 நாட்கள் மூடப்படுகின்றன. இந்த நிலை நீடித்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x