Published : 26 Aug 2022 07:23 AM
Last Updated : 26 Aug 2022 07:23 AM

ஈரோடு அருகே கருணாநிதி சிலை திறப்பு: நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

சிலைத் திறப்பு விழாவில் முதல்வர் பேசியதாவது: தந்தையின் சிலையைத் திறக்கும் மகனாக அல்லாமல், தலைவர் சிலையைத் திறக்கும் தொண்டனாக நான் வந்திருக்கிறேன். கருணாநிதியின் சிலையை பார்க்கும்போது நாம் உணர்வை, உத்வேகத்தை, உற்சாகத்தை, மகிழ்ச்சியை பெறுகிறோம்.

கருணாநிதியைப்போல, பேச, எழுத, உழைக்க முடியாது என்றாலும், அவர் நினைத்த காரியங்கள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டுதான், 6-வது முறையாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளோம்.

இப்போதெல்லாம், கட்சி தொடங்குவதற்கு முன்பே, நாம் தான் ஆட்சியமைப்போம், நான் தான் முதல்வர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சில அரசியல்வாதிகளைப் பார்க்கிறோம். ஆனால், 1949-ல் திமுக தொடங்கிய நிலையில் 1957-ல் வாக்கெடுப்பு நடத்திதான் திமுக தேர்தல் களத்துக்கு வந்தது.

தேர்தல் நேரத்தில் சொன்ன அத்தனை உறுதிமொழிகளையும் திமுக நிறைவேற்றி வருகிறது. திராவிட மாடல் ஆட்சியை தொடர்ந்து நடத்துவோம் என்ற உறுதிமொழியை இந்த நிகழ்வின் மூலம் ஏற்கிறேன் என்று பேசினார்.

விழாவில், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி என்.சிவகுமார், ஈரோடு மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், ஈரோடு நகர செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம், மண்டல தலைவர்கள் சுப்பிரமணியம், தண்டபாணி, மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x