Published : 16 Oct 2016 02:29 PM
Last Updated : 16 Oct 2016 02:29 PM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை: பொதுப்பணித்துறையின் மூத்த பொறியாளர் சங்கம் விளக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற தேவையில்லை என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் மூத்த பொறியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூரில் நேற்று இச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கிளைத் தலைவரும், முன்னாள் தலைமை பொறியாளருமான ஆர்.பரந்தாமன் தலைமை வகித்தார். முன்னாள் தலைமைப் பொறியாளர்கள் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம், ஜெயராமன், ஆர்.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் கண்காணிப்பு பொறியாளர்கள் மாயூரநாதன், ராஜாராம், முன்னாள் மேற்பார்வைப் பொறியாளர் அழகப்பன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுந்தரவிமலநாதன், காவிரி டெல்டா விளைபொருள் விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பின் செய்தி யாளர் களிடம் பரந்தாமன் கூறியதாவது: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு 2007-ல் வெளியிடப்பட்டாலும், 6 ஆண்டுகள் கழித்து 2013-ல் தான் அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனாலும் இன்று வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இந்த வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற தேவையில்லை.

ஏற்கெனவே, நர்மதா நதிநீர் ஆணையம், கிருஷ்ணா - கோதாவரி மேலாண்மை வாரியம் என 9 நதிநீர் வாரியங்கள் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றியே அமைக்கப்பட்டுள்ளன. அந்த வாரியங்கள் அனைத்தும் அரசிதழில் வெளியான உடன் அமலுக்கு வந்துள்ளன. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு தாமதம் என்று தெரியவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து இதுவரை யாரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதன் செயல்பாடு மூடுமந்திரமாக உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தை தள்ளிப்போடலாமே தவிர அதை அமைக்க முடியாது என யாரும் கூறமுடியாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x