

சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம், நேற்று முன்தினம் கையெழுத்தானது. இதில், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இனி ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், வேலைநிறுத்த நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், 21 வேலைநிறுத்த நாட்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்களும் நிர்வாகிகளும் நேற்று அதிகாலை பணிக்கு செல்லும் முன்பும், உணவு இடைவேளையின்போதும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மொத்தம் 319 பணிமனைகளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்று அண்ணா பேரவை
அண்ணா தொழிற்சங்கப் பேரவை இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. "சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் ஆக. 26-ம் தேதி (இன்று) பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.