Published : 26 Aug 2022 07:34 AM
Last Updated : 26 Aug 2022 07:34 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பணிகளை, சிறப்பான முறையில் மேற்கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை பணியாளர்கள் 1,000 பேருக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு சான்றுகளை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, முன்னேற்பாட்டு பணிகளுக்காக, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் என 1,000 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இப்பணியாளர்கள், சிறப்பான முறையில் பணிகளை மேற்கொண்டதற்காக,துறை சார்பில் பாராட்டு சான்று வழங்கும் நிகழ்ச்சி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று இப்பணியாளர்களுக்கு பாராட்டு சான்றுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் இயக்குநர் தீபக் ஜேக்கப், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சம்சத் பேகம் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர், அமைச்சர் சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செஸ் போட்டிக்கான முன்னேற்பாட்டு பணிகளான விடுதி அறைகள், தரமான உணவுகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் அனைவரும் உயர் அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு ஏற்ப சிறப்பான முறையில் பணியாற்றினர்.
இவர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள், கொசுப்புழு ஒழிப்பு, கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டனர். ஒவ்வொரு விடுதிகளிலும் யோக பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு யோகாசன பயிற்சிகள் வழங்கப்பட்டன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT