

சென்னை: தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள சிவில் நீதிபதி பணியிடங்கள் 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
அதற்கு முன் இத்தேர்வை உயர்நீதிமன்றமே நடத்தி வந்தது. டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வை நடத்தினாலும், நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு போன்றவற்றில் உயர் நீதிமன்றம் பங்களித்து வருகிறது.
2018-ல் 320 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 222பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால்,2019-ல் 176 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நடத்திய நேர்முகத் தேர்வு காரணமாக 56 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட 2022-ம் ஆண்டுக்கான உத்தேச திட்டமிடல் காலஅட்டவணையில், '245 சிவில் நீதிபதிகள் காலி இடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும். ஜூலைமாதம் முதல்கட்ட எழுத்துத் தேர்வுநடத்தப்பட்டு, செப்டம்பரில் முடிவுகள் வெளியிடப்படும்.
அதில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு பிரதான எழுத்துத் தேர்வு 2023 ஜனவரியில் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும். தொடர்ந்து ஏப்ரல் மாதம்நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு நடத்தப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தனியார் பயிற்சி மையங்களிலும், தமிழ்நாடு, புதுச்சேரிபார் கவுன்சில் மையம் நடத்தும் பயிற்சி வகுப்பிலும் ஏராளமானோர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், இதுவரை சிவில் நீதிபதிகளுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடவில்லை. இதுகுறித்து தேர்வுக்குத் தயாராகி வரும் இளம் வழக்கறிஞர் கே.ராஜலட்சுமி கூறும்போது, “கரோனாவைக் காரணம் காட்டி 2 ஆண்டுகளாக சிவில் நீதிபதிகள் தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பாணை கடந்த மே மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி உத்தேசமாக அறிவித்திருந்தது.
ஆனால், தற்போது வரை அறிவிப்பு வெளியாகவில்லை. தேர்வு நடைமுறைகளை முடித்து, பணி நியமனம் பெறவேஓராண்டுக்கு மேலாகி விடும் என்ற நிலையில், தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி காலம் தாழ்த்தாமல் வெளியிட வேண்டும்” என்றார்.
இளம் வழக்கறிஞர் வி.தேவிப்பிரியா கூறும்போது, “சிவில் நீதிபதிகள்எழுத்துத் தேர்வுக்கான உச்சபட்ச வயதுவரம்பு 40-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவதில்லை.
2019-க்குப் பிறகு இந்த ஆண்டுதான் நடைபெற உள்ளது. எனவே, வயது வரம்பில் 2 ஆண்டுகள் சலுகை அளிக்கவேண்டும். சட்டப் படிப்பை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கும் தற்போதுஉச்சபட்ச வயது வரம்பு 27-ஆக உள்ளது. அவர்களுக்கும் இதேபோல 2ஆண்டுகள் சலுகை அளிக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, “சிவில் நீதிபதிகளுக்கான உயர்த்தப்பட்ட சம்பள விகிதம் மற்றும் தமிழ் வழியில் பயின்றமைக்கான இடஒதுக்கீடு போன்றவற்றில் நிர்வாக ரீதியாக சிலதிருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், இத்தேர்வை குறித்த காலத்துக்குள் அறிவிக்க முடியவில்லை. எனினும், விரைவில் அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவிக்கப்பட்டது.