

மதுரையில் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு பல மாதங்களாக தலைமறைவாக உள்ள 2 பேரை கைது செய்ய சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையில் ஒரு நாளிதழ் அலுவலகத்தில் கடந்த 9.5.2007-ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைதான அட்டாக் பாண்டி உட்பட 17 பேரை மதுரை சிபிஐ நீதிமன்றம் 2009-ல் விடுதலை செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் சிபிஐ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தாமதப் படுத்தியதால் அட்டாக்பாண்டி கூட்டாளிகள் 12 பேருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் சரணடைந்தார். தயாமுத்து, திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். கைதானவர்களில் 3 பேருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஜாமீன் கேட்டு 4 பேர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்ற கிளை முதல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, “தலைமறைவாக உள்ள இருவரில் தயாமுத்து வெளிநாட்டில் உள்ளார். அவரை யும் மற்றொருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகி றோம்” என்றார். இதையடுத்து விசாரணையை நவ. 14-க்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதற்குள் தலைமறைவாக இருக்கும் இரு வரையும் கைது செய்து நீதிமன்றத் தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.
விசாரணையின்போது பிடி வாரண்ட்டில் கைதாகி தற்போது சிறையில் இருப்பவர்களை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அடுத்த விசாரணையின்போது சிறையில் இருப்பவர்களை ஆஜர்படுத்தத் தேவையில்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்