

ஆங்கிலச் சொல்லுக்கு தமிழிலோ அல்லது தமிழ்ச் சொல்லுக்கே தமிழில் அர்த்தம் தெரிய வேண்டுமானால் நாம் அகராதியைப் பயன்படுத்துகிறோம், சிலர் இணையத்தைப் பயன்படுத்தி பொருளை அறிந்து கொள்கிறோம். ஆனால் நம்மிடையே பல்வேறு அகராதிகள் இருக்கின்றன அவற்றில் பலவற்றை நாம் அறிந்திருக்ககூட மாட்டோம். அனைத்து அகராதிகளிலும் நாம் தேடும் சொல்லுக்கு என்ன பொருள் இருக்கிறது என்பதை அறிய >தமிழ்ப்புலவர்.காம் என்ற இணையதளத்தைப் பயன்படுத்தினால் போதும். இந்த இணையதளத்தில் மொத்தம் பனிரெண்டு அகராதிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழ்ப்புலவர்.காம் இணையதளத்தின் தொடக்க விழா சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்ப்புலவர்.காம் இணையதளமானது அல்டிமேட் மென்பொருள் தீர்வகக் குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ளது.
பாரத் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொன்னவைக்கோ இணையதளத்தை தொடங்கி வைத்துப் பேசிய போது, ''இவ்விணையதளம் வெறுமனே அகராதியாக மட்டும் செயல்படாமல் தமிழின் இலக்கணத்தை சொல்லித் தருவது போன்ற அம்சங்களைக் கொண்டிருப்பது சிறப்பு. மேலும் நாம் கொடுக்கும் வார்த்தைக்கான பொருளை மட்டும் தராமல் அது தொடர்பான பழமொழிகளையும் அளிக்கிறது. சொல் தரும் பொருளோடு நின்றுவிடாமல் அச்சொல்லுக்கான எதிர்ச் சொல்லையும் நமக்குத் தருகிறது. மேலும் சந்தச் சொல் தேடல் எனும் புதிய ஒன்றை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. சந்தத்திற்கு ஏற்ற வார்த்தைகளை நாம் பெற்றுக்கொள்ளலாம். இப்படியான மென்பொருளை உருவாக்க இவருக்கு எந்தவிதமான பொருளாதார உதவியும் இல்லை. அவரது சொந்த செலவிலேயே அத்தனை வேலைகளையும் செய்துள்ளார்'' என்று கூறினார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன் பேசிய போது, ''தமிழுக்கு நிறைய மென்பொருள்கள் இருக்கின்றன. அவை பலதுறை சார்ந்ததாக இருக்கின்றன. ஆனால் முழுக்க முழுக்க அகராதிக்கென ஒரு மென்பொருள் இதுவாகத்தான் இருக்கும். நமக்கு அடுத்த தலைமுறையினர் அச்சுகளில் வந்த புத்தகங்களை படிப்பார்களா என்றே சந்தேகமாக இருக்கும் வேளையில் கணினி சார்ந்து தமிழை வளர்க்க வேண்டும் அதனை இந்த இணையதளம் செய்கிறது. இத்தகைய முயற்சி அடுத்த தலைமுறைக்கான முன்னெடுப்பு என்றே சொல்லலாம்'' இவ்வாறு கூறினார்.
தமிழ்ப் பேரகராதி குழுத் தலைவர் ஜெயதேவன் ''இப்பொழுது கணினி அறிவு என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. கருத்துப் பரிமாற்றத்திற்கு அதன் தேவை அதிகமாக இருக்கிறது. ஜெர்மனிய அறிஞர் தாமஸ் பார்டன் என்பவர்தான் முதலில் தமிழ் அகராதியை சமஸ்கிருத அகராதியுடன் இணைத்தார். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தேடுவது இதன் சிறப்பு. இவ்விணையதளத்தை இணையவசதி இல்லாத போதும் தேடும்வகையில் மேம்படுத்த வேண்டும். மேலும் தமிழ்ச் சொல்லை எவ்வாறு உச்சரிப்பது போன்ற வசதிகளையும் இவற்றில் இணைக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
மொழி ஆராய்ச்சியாளரான சோபா, ''மற்ற எந்த இந்திய மொழிகளிலும் இதுபோன்ற ஒரு முயற்சி நடைபெறவில்லை. இந்திய மொழிகளிலேயே கணினி சார்ந்து பயன்படுத்துவதில் தமிழ் மொழியே முதன்மையானதாக இருக்கிறது. ஐரோப்பிய மொழிகள் பலவற்றை இதனுடன் ஒப்பிட முடியும். இது ஒரு முன்னோடியான முயற்சி'' என்றும் கூறினார்.
முனைவர் தமிழ்ப்பரிதி, ''இணையவெளியில் தமிழின் நிலை இவ்வளவு தூரம் உயர அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. தமிழக அரசின் இணையதளங்களில் 8% மட்டுமே தமிழ் உள்ளது. இதுபோன்ற முயற்சிகளுக்கு அரசின் உதவி கிடைப்பது அவசியம்'' என்று கூறினார்.