

உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
இது தொடர்பாக தலைவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைகள் விவரம்:
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:
அவசர அவசரமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு போதிய அவகாசத்தை மாநில தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. எனவே, உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாஜக வரவேற்கிறது. போதிய அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும். மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:
மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் தேதியை போதிய கால அவகாசம் கொடுக்காமல் அறிவித்தது. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதை, தமிழக காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தொகுதி களை மறுவரையறை செய்யாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டது தவறு என்று கூறி உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. உள்ளாட்சி ஜனநாயகத்தை காப்பாற்றும் நோக்கத்துடன் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:
பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய இடங்கள் மறுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி தேர்தலை நடத்த வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன்:
முதல் நாள் மாலை உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் தேதியை அறிவித்து விட்டு மறுநாள் காலை வேட்புமனு தாக்கல் தொடங்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் போதிய கால அவகாசம் வழங்கவில்லை. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:
உள்ளாட்சித் தேர்தலில் சுழற்சி முறை, பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட தகவல்கள் மற்ற கட்சிகளுக்கு தெரியாமல் இருந்த சூழலில், அதிமுக மட்டும் வேட்பாளர்களை அறிவித்தது. எனவே, ஜனநாயகத்துக்கு எதிரான படி இருந்த செயல்பாடுகளின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை வரவேற்கிறோம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
தமிழகத்தில் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தலை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதற்கு தமிழக தேர்தல் ஆணையம்தான் பொறுப்பேற்க வேண்டும். உயர் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் தேர்தலை நடத்த வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் சுழற்சி முறை, பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட தகவல்கள் மற்ற கட்சிகளுக்கு தெரியாமல் இருந்த சூழலில், அதிமுக மட்டும் வேட்பாளர்களை அறிவித்தது.