உள்ளாட்சித் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

உள்ளாட்சித் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
Updated on
1 min read

உள்ளாட்சித் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு தங்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களது சுயபலத்தை நிரூபிக்க தனித்துப் போட்டியிட வேண்டும் என நான் கூறியிருந்தேன். தற்போது காங்கிரஸ் கட்சி அதனை நோக்கி பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் தனித்துப் போட்டியிடலாமா என அக்கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் கேட்டுள்ளார். அதற்கு 99 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள். இது காங்கிரஸின் உள்கட்சி விவகாரம். ஆனால், தனித்துப் போட்டியிடுவதை வரவேற்கிறேன்.

நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேசிய நதிநீர் கட்டுப்பாட்டு மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இந்த மசோதாவில் என்னென்ன அம்சங்கள் உள்ளது என்பதை தெரிந்து கொண்ட பிறகே நான் கருத்து கூற முடியும். காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு எதையும் செய்யாது.

தமிழக மக்கள் நலன் கருதி இனயம் துறைமுகத் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். இந்தத் திட்டத்துக்கு தொடக்கத்தில் இருந்தே ஆதரவு தரும் தலைவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in