

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் தள்ளிப்போனதற்கு காரணம், பணப் பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுக, திமுக வேட்பாளர்கள்தான் என்பதால், அவர்கள் மீண்டும் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் அய்யம்பாளையத்தை சேர்ந்த எஸ்.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது. இத்தேர்தலில் வழக்கத்தை விட அதிக அளவு பணம் வாக் காளர்களுக்கு அளிக்கப்பட்டது. அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியும், திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியும் ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்திக்காமல், தேர்தல் ஆணைய விதிமுறைகளை மதிக்காமல் செயல்பட்டனர். இவர்கள் இருவர் சார்பிலும் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்த பல கோடி ரூபாய் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, அதிமுக வைச் சேர்ந்த கரூர் அன்புநாதன் வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.4 கோடியே 77 லட்சம் ரொக்கம், ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பிலான வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. திமுக வேட்பாளர் பழனிச்சாமி மற்றும் அவரது மகன் வீட்டில் இருந்து ரூ.1 கோடியே 95 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பணப் பட்டுவாடா தொடர்பாக அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப் பட்டு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 500 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட இத்தொகுதிக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளது. தற்போது இந்த தேர்தலிலும் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். இவரும் முன்பு திமுக சார்பில் போட்டியிட்ட கே.சி.பழனிச்சாமியும்தான் இத்தொகுதியில் தேர்தல் தள்ளிப் போனதற்கும், ரத்து செய்யப்பட்ட தற்கும் மூலகாரணம். மறுபடியும் இவர்களையே போட்டியிட அனுமதித்தால் அது ஜனநாயகத் துக்கு கேலிக்கூத்தாகிவிடும்.
எனவே, இவர்கள் இருவரையும் தேர்தலில் போட்டியிட அனுமதிக் கக் கூடாது. அவர்களது வேட்புமனுக் களை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும். மீறி அவர்கள் போட்டியிட்டால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்களை அவர்களுக்கு ஒதுக்கக்கூடாது. அவர்களுக்கு பதிவாகும் ஓட்டுகளை எண்ணக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.