

சென்னையில் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவி உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை கிண்டியில் செல்லம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான இந்தக் கல்லூரியில் 2, 500-க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். காலை, மாலை என இரண்டு ஷிப்ட்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாலை நேர வகுப்புகள், பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
கல்லூரிக்கு அருகே பேருந்து நிறுத்தம் இருந்தாலும் குறிப்பிட்ட சில சாதாரண கட்டண பேருந்துகள் மட்டுமே அங்கு நிற்கும். இதனால், மாணவிகள் கிண்டி மற்றும் சின்னமலையில் இறங்கி, அங்கிருந்து கல்லூரிக்கு நடந்து செல்கின்றனர். கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் இறங்கும் மாணவிகள், மேம்பாலத்தின் மீதும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து வருபவர்கள் மேம்பாலத்துக்கு கீழே உள்ள சுரங்கப்பாதை வழியாகவும் நடந்து செல்வது வழக்கம். எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு எதிரே மேம்பாலத்தின் இறக்கத்தில் ரேஸ் கோர்ஸ் சாலை இணையும்.
தண்ணீர் லாரி
மாலை நேர கல்லூரியில் படிக்கும் திருவொற்றியூரைச் சேர்ந்த எல்.சித்ரா, புளியந்தோப்பு ஆஷா ஸ்ருதி, பல்லாவரம் எம்.காயத்ரி மற்றும் டி.ஜி.ஜெயஸ்ரீ, மீனா ஆகிய மாணவிகள் நேற்று பகல் 1.30 மணி அளவில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் இருந்து கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். மேம்பால சுரங்கப்பாதை வழியாக வந்து அண்ணா சாலையை அடைந்தனர்.
அப்போது, அதிவேகமாக வந்த சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி ஒன்று, மாணவிகள் மீது மோதியது. அந்த வழியாக வந்த 2 பைக்குகள் மீதும் மோதிய லாரி, பின்னர் பெட்ரோல் பங்க் அருகே நின்றிருந்த ஆட்டோ மீது மோதியது. அதன்பிறகும் நிற்காமல் சாலையின் சென்டர் மீடியனை உரசியபடி சிறிது தூரம் சென்று நின்றது. லாரி ஓட்டுநர் கீழே குதித்து தப்பியோடிவிட்டார்.
லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட மாணவிகள் சித்ரா, ஆஷா ஸ்ருதி, காயத்ரி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மாணவி ஜெயஸ்ரீ, பைக்குகளில் வந்த 2 இளைஞர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவி மீனாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. லாரி மோதியதில் ஆட்டோவின் பின்பகுதி சேதமடைந்தது. அதில் பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
றபலியான மாணவிகள் சித்ரா, ஆஷா ஸ்ருதி இருவரும் பி.காம் 3-ம் ஆண்டும், காயத்ரி பி.காம் 2-ம் ஆண்டும் படித்து வந்தனர். காயமடைந்த ஜெயஸ்ரீ, மீனா இருவரும் பி.எஸ்சி., கணிதம் படித்து வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் மாணவிகளின் புத்தகங்களும், தண்ணீர் பாட்டில், சமோசா, ரத்தம் படிந்த காலணிகள், கைக்குட்டைகள் சிதறிக் கிடந்தன. விபத்து நடந்ததும் அங்கு திரண்ட பொதுமக்கள், மாணவிகளின் உடல்களைப் பார்த்து கதறி அழுதனர்.
இந்த விபத்து காரணமாக ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை நேற்று மாலை கைது செய்தனர்.
பேராசிரியைகள் மறியல்
விபத்தில் 3 மாணவிகள் பலியானதைத் தொடர்ந்து செல்லம்மாள் கல்லூரிக்கு உடனடியாக விடுமுறை விடப்பட்டது. மாணவிகள் அனைவரும் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் இல்லாததுதான் விபத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டிய கல்லூரி பேராசிரியர்கள் மாலை 4.30 மணி அளவில் அண்ணா சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
செல்லம்மாள் கல்லூரி முதல்வர் உருக்கம்
பேருந்து நிறுத்தம் அமைத்துக் கொடுக்காததால் 3 மாணவிகளின் உயிரை பலி கொடுத்துள்ளோம் என்று செல்லம்மாள் கல்லூரியின் முதல்வர் வி.ஜி.விஜயலட்சுமி கூறினார்.
இது தொடர்பாக ‘தி இந்து’விடம் அவர் நேற்று கூறியதாவது:
தண்ணீர் லாரி மோதியதால் ஆஷா ஸ்ருதி, எம்.காயத்ரி, எல்.சித்ரா ஆகிய 3 மாணவிகளை இழந்துள்ளோம். மீனா, டி.ஜி.ஜெயஸ்ரீ ஆகிய 2 மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்துக்கு பிரேக் பிடிக்காத தண்ணீர் லாரிதான் பிரதான காரணம் என்றாலும், எங்கள் கல்லூரிக்கு பேருந்து நிறுத்தம் அமைத்துக் கொடுக்காததும் ஒரு காரணம்.
எங்கள் கல்லூரியில் 2,500 மாணவிகள் படிக்கின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த எளிய குடும்பத்து மாணவிகள்தான் எங்கள் கல்லூரியில் அதிகம் படிக்கின்றனர். தாம்பரம் மார்க்கத்தில் இருந்து வருபவர்கள் கிண்டி ரேஸ் கோர்ஸ் நிறுத்தத்தில் இறங்கி சுமார் ஒரு கி.மீ. நடந்து வரவேண்டும் இல்லையென்றால் சின்னமலை நிறுத்தத்தில் இறங்கி பின்னோக்கி கல்லூரிக்கு வர வேண்டும்.
அண்ணா சாலையின் மிகவும் பரபரப்பான பகுதியில் மாணவிகள் மிகவும் ஆபத்தான முறையில்தான் தினமும் கல்லூரி வந்து செல்கின்றனர். கிண்டி ரேஸ் கோர்ஸில் இருந்து கல்லூரி நோக்கி மாணவிகள் வந்தபோதுதான் பிரேக் பிடிக்காத தண்ணீர் லாரி மோதியுள்ளது. கல்லூரிக்கு அருகேயுள்ள நிறுத்தத்தில் மிகச்சில பேருந்துகள்தான் நிற்கும். கல்லூரிக்கென்று பிரத்யேகமான பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேறாததால் 3 மாணவிகளை பலி கொடுத்துள்ளோம். இனியாவது பேருந்து நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.