Published : 19 Oct 2016 08:35 AM
Last Updated : 19 Oct 2016 08:35 AM

தீவுத்திடலில் விரிவான ஏற்பாடுகள்: பட்டாசு விற்பனை தொடக்க விழா இன்று நடைபெறுகிறது

தீபாவளியையொட்டி தீவுத் திடலில் பட்டாசு வாங்கு வதற்காக 2 லட்சத்துக்கும் மேற் பட்டோர் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுவதால் அதற்கேற்ப விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

பட்டாசு விற்பனை தொடங்க விழா இன்று மாலை நடக்கிறது. நாளைமுதல் அனைத்து கடைகளிலும் பட்டாசு விற்பனை முழுவீச்சில் தொடங்கும்.

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. புத்தாடை, இனிப்பு, பட்டாசுகளுடன் தீபாவளியைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்தாண்டு தீவுத்திடல், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரில் உள்ள மைதானம், அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரி, மேடவாக்கத்தில் உள்ள மைதானம் ஆகிய இடங்களில் பட்டாசு விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவற்றில் சுமார் 4 லட்சம் சதுர அடி கொண்ட தீவுத்திடலில்தான் மிகப்பெரிய அளவில் பட்டாசு விற்பனை நடைபெறும். இங்கு இந்த ஆண்டு 58 கடைகள், ஒவ்வொன்றும் 20 அடி நீளம், 10 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தீவுத்திடலில் பட்டாசு வாங்குவதற்கு போர் நினைவுச் சின்னம் எதிரே உள்ள 3, 4, 5, 6 ஆகிய நுழைவு வாயில்கள் வழியே செல்லலாம். 7, 8 நுழைவு வாயில்கள் வழியே வெளியே செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீவுத்திடலின் மற்றொரு பகுதியான அண்ணா சாலை மன்றோ சிலை எதிரே டூவீலர், கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் உணவகம் உள்ளது. இதுதவிர பட்டாசு வாங்க வரும் பொதுமக்கள் வசதிக்காக ஓட்டல் ஒன்றும் திறக்கப்படுகிறது. 24 மணி நேர ஜெனரேட்டர் வசதி, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பட்டாசு வாங்க வருவோர் வசதிக்காக நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் மாநகர போக்குவரத்துக் கழகம் பஸ்கள் தீவுத்திடல் 6-ம் எண் நுழைவு வாயில் முன்பு நின்று செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவகாசியில் இருந்து தீவுத்திடலுக்கு இன்று (புதன்கிழமை) லாரிகள் மூலம் பட்டாசுகள் வந்து சேருகின்றன. மாலை 4 மணியளவில் பட்டாசு விற்பனை தொடக்க விழா நடைபெறுகிறது. பட்டாசு விற்பனையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில், இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் சின்னி ஜெயந்த், நடிகை காயத்ரி ரகுராம், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

நாளைமுதல் (20-ம் தேதி) தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசு விற்பனை நடைபெறும். தீபாவளிக்கு 3 நாட்கள் முன்பும் தீபாவளி அன்றும் காலை 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை பட்டாசு விற்பனை நடைபெறும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், பட்டாசு வாங்க லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் திருட்டைத் தடுக்க வியாபாரிகள் சார்பில் தனியார் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்கும். அனைத்து கடைகளும் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் பயன்படுத்தும் 10 விதமான துப்பாக்கிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த துப்பாக்கிகளின் விலை ரூ.25 முதல் ரூ.400 வரையிலும், கிப்ட் பாக்ஸ் விலை ரூ.350 முதல் ரூ.3 ஆயிரம் வரையிலும் உள்ளது” என்றனர்.

சென்னைப் பெருநகர பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத்தின் செயல் தலைவர் எம்.ஷேக் அப்துல்லா கூறுகையில், “அண்ணாசாலை மன்றோ சிலை எதிரே உள்ள பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அப்போது மழை பெய்து தண்ணீர் தேங்கியதால் பட்டாசு வாங்க மக்கள் வரவில்லை. கார்களில் வாங்க வந்தவர்களின் கார்களும் சேற்றில் சிக்கிக்கொண்டன. பட்டாசு வியாபாரிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்தாண்டு போர் நினைவுச் சின்னம் எதிரே உள்ள பகுதியில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருப்பதால் எவ்வளவு மழை பெய்தாலும் இங்கு தண்ணீர் தேங்காது. எனவே, மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் பட்டாசு வாங்கிச் செல்ல முடியும். சிவகாசி பட்டாசுகள் மட்டும் விற்பனை செய்யப்படும். சீன பட்டாசுகள் விற்பனைக்கு அனுமதியில்லை. அதையும் மீறி யாராவது விற்றால் அவர்கள் மீது சங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x