Published : 25 Aug 2022 06:22 PM
Last Updated : 25 Aug 2022 06:22 PM

மதுரை | முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் தாமதமாவதாக அதிமுக குற்றச்சாட்டு - மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

மதுரை: முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டம் தாமதமாகி வருவதாக அதிமுக குற்றச்சாட்டு வைத்ததை அடுத்து மாநகராட்சி ஆணையாளர் விரைந்து சென்று பார்வையிட்டார்.

மதுரை மாநகராட்சியில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி 14 லட்சத்து 68 ஆயிரத்து 989 மக்கள் வசித்தனர். தற்போது மதுரை மாநகராட்சியின் மக்கள் தொகை 20 லட்சத்தை நெருங்கிவிட்டது. வெளியூர்களில் இருந்து தினமும் மதுரைக்கு வந்து செல்லும் பயணிகளையும் சேர்த்தால் மக்கள் தொகை 20 லட்சத்தை தாண்டிவிடும்.

தற்போது மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து 115 மில்லியன் லிட்டர், மாநகராட்சி எல்லைக்குள் வைகை ஆற்றுப்படுக்கையிலிருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் 47 மில்லியன் லிட்டர், காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 30 மில்லியன் லிட்டர் உள்பட மொத்தம் 192 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. 2023-ம் ஆண்டில் இன்னும் மக்கள் தொகை 25 சவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மத்திய பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் அமைப்பு வழிகாட்டுதல்படி தனிநபர் குடிநீர் தேவை நாளொன்றுக்கு 135 லிட்டர் என்ற அடிப்படையில் குடிநீர் வழங்க வேண்டும். இந்த அடிப்படையில் 2034ஆம் ஆண்டில் மாநகராட்சியின் குடிநீர் தேவை நாள் ஒன்றுக்கு 317 மில்லியன் லிட்டராக இருக்கும் என்று மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

அதனால், தற்போது கிடைக்கப்பெறும் 192 மில்லியன் லிட்டர் போக மேலும் தேவைப்படும் 125 மில்லியன் லிட்டரை புதிதாக மாநகராட்சி பெற வேண்டும். அதற்காக தற்போது முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.1295.76 கோடியில் இந்த குடிநீர் மேம்பாட்டு திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

ஐந்து பகுதியாக நடக்கும் இந்தத் திட்டம் அலட்சியமாக நடத்தப்படுவதாகவும், இதே நிலையில் பணிகள் தொடர்ந்து 2024-ம் ஆண்டில் கூட இந்தத் திட்டத்தில் குடிநீர் வழங்க இயலாது என்றும், அதிகாரிகள் ஆணையாளரையும், தமிழக அரசையும் ஏமாற்றுவதாக நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். மேலும், இந்த குடிநீர் திட்டம் தொடர்பாக அவர்கள் மாநகராட்சி ஆணையாளர், அதிகாரிகளுடன் கடுமையாக வாதம் செய்தனர்.

அப்போது அதிமுக கவுன்சிலர்கள், இந்தத் திட்டத்தை விரைவாக நடத்த ஒரு குழு அமைத்து, அதில் எதிர்க்கட்சி கவுன்சிலர்களையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, பணிகளை முடுக்கிவிட இன்று காலை 6 மணிக்கே மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் சிங் ஜித் காலோன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தேனி மாவட்டத்திற்கு சென்று முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மதுரை நகருக்கு குடிநீர் கொண்டு வரும் இந்தத் திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து உப்பார்பட்டி பிரிவு பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடக்கிறது. இப்பணிகளையும் ஆணையாளர் சிம்ரஜ் ஜித் சிங் ஆய்வு செய்தார். அடுத்தக்கட்டமாக கவுன்சிலர்களை உள்ளடக்கிய குழு அமைத்து அவர்களையும் அழைத்து சென்று ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''இந்த திட்டத்தில் மதுரை மக்களுக்கு 2024-ம் ஆண்டில் முல்லைப் பெரியாறு தண்ணீரை நேரடியாக வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஆணையாளர் தினமும் ஆய்வு செய்கிறார். நகராட்சி நிர்வாகத் துறை செயலர் வாரந்தோறும் வீடியோ கான்பரன்சங்கில் ஆய்வு செய்கிறார். 2024-ல் பணி முழுமையடைந்து குடிநீர் வழங்கப்படும்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x