Published : 25 Aug 2022 05:19 PM
Last Updated : 25 Aug 2022 05:19 PM

மக்கள் பிரச்சினைகளுக்காக நீதி கிடைக்கும் வரை தேமுதிக போராடும்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: "மின் கட்டண உயர்வு உள்ளிட்ட என அனைத்து பிரச்சினைகளிலும், தேமுதிகதான் முதல் ஆளாக களத்தில் இறங்கி அனைத்து போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். இனியும் மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் முதல் ஆளாக இருந்து மக்களுக்கு ஒரு நீதி கிடைக்கும்வரை போராடுவோம்" என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. கட்சி அலுவலகம் வந்த நிறுவனத் தலைவர் விஜயகாந்திற்கு கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது: "விஜயகாந்த் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். பிறந்தநாளான இன்று தொண்டர்களை சந்தித்ததால் அவருக்கு மகிழ்ச்சி. இதற்காக தேமுதிக சார்பாக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ரொம்ப நாட்களாகவே நடிகர் சங்கத்தினர் தலைவர் விஜயகாந்தை சந்திக்க வேண்டும் என்று கேட்டு வந்தனர். ஒரு நல்ல நேரம் வரட்டும் நான் அனைவரையும் சந்திக்கிறேன் என்று அவரும் கூறியிருந்தார்.

பிறந்தநாளையொட்டி சந்திப்பது சரியாக இருக்கும் என்ற காரணத்தால், இன்றைய தினம் நடிகர் கார்த்தி, நடிகர் சங்கத்தின் சார்பில் வாழ்த்து கூறியிருக்கிறார். இதற்காக ஒட்டுமொத்த நடிகர் சங்கத்திற்கும் தேமுதிக சார்பில் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசியல் கட்சித் தலைவர், சினிமா நடிகர் என்பதற்கு அப்பாற்பட்டு மனிதநேயமிக்க தலைவர் ஒருவர் தமிழகத்தில் இருக்கிறார் என்றால் அது விஜயகாந்த் மட்டும்தான். கட்சி எழுச்சியாகத்தான் உள்ளது. உட்கட்சி தேர்தல் தற்போது நடந்துகொண்டுள்ளது. அது இந்த மாதத்தில் முடிந்துவிடும். அதன்பின்னர், செயற்குழு பொதுக்குழு நடைபெறும். எனவே எங்களது பணிகளை சிறப்பாக தொய்வின்றி செய்துவருகிறோம்.

மின் கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, என அனைத்து பிரச்சினைகளிலும், தேமுதிகதான் முதல் ஆளாக களத்தில் இறங்கி அனைத்து போராட்டங்களையும் நடத்தி இருக்கிறோம். இனியும் மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் முதல் ஆளாக இருந்து மக்களுக்கு ஒரு நீதி கிடைக்கும்வரை நாங்கள் போராடுவோம்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x