

மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துவிதமான உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகின்றது. இதனால் ஏழை, எளிய மக்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். வருகின்ற மாதங்களில் தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பண்டிகைகள் வர இருப்பதால் தற்போது நிலவும் விலைவாசி உயர்வினால் சாதாரண அடித்தட்டு மக்கள் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சர்க்கரை, பருப்பு வகைகள், கடலை மாவு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு பொது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 மாத காலமாக தொழிற்துறை மிகவும் மந்தமாக உள்ளது. குறிப்பாக கட்டுமானத் தொழில்கள் தேக்கநிலையில் உள்ளதால் அன்றாட கூலிவேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் வேலையின்றி, வருமானம் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் அன்றாடம் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அத்தியாவசியப் பொருட்களையே வாங்க கஷ்டப்படும்போது, விலைவாசி உயர்வினால் உணவுப்பொருட்களை வாங்க முடியாத நிலையே அவர்களுக்கு ஏற்படும்.
மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு உணவு தானியங்களின் உற்பத்தியைப் பெருக்கி, விலைவாசியைக் கட்டுப்படுத்தி, தொழில்துறையை முன்னேற்றுவோம் உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்த பின்பும் இதுவரை விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை எடுக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டது.
குறிப்பாக நாடு முழுவதும் விவசாயத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு, உணவுத் தானியங்களின் உற்பத்தி குறைந்து கொண்டே போகிறது. எனவே விவசாயத் தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதனை ஊக்கப்படுத்த வேண்டிய செயல்களில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
தமிழக அரசு அன்றாடத் தேவையான பருப்பு வகைகள், சர்க்கரை, எண்ணெய், மாவு வகைகள் போன்றவற்றை தரமானதாக, மலிவு விலையில் கூட்டுறவு அங்காடிகள், நியாவிலைக் கடைகள் ஆகியவற்றில் தங்கு, தடையின்றி வழங்கிட வேண்டும்.
தற்போது பண்டிகைக் காலம் வருவதால் சாதாரண ஏழை, எளிய மக்கள் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட இது போன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.