

சின்னசேலம் பள்ளி மாணவி மரணத்தில், ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வறிக்கை நகலை மாணவியின் பெற்றோரிடம் வழங்க விழுப்புரம் நீதித்துறை நடுவர் மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், மாணவியின் 2-வது பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஜூலை 13-ல் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தார்.
இதையடுத்து, மறுநாள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. எனினும் மாணவியின் பெற்றோர் கோரிக்கையை ஏற்று, மறு பிரேத பரிசோதனை செய்ய 3 பேர் கொண்ட குழுவை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. ஜூலை 22-ம் தேதி 2-வது முறையாக பிரேத பரிசோதனை நடந்தது.
இதற்கிடையே, மாணவியின் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையைச் சேர்ந்த தடயவியல் துறை பேராசிரியர்களான குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, தனது அறிக்கையை கடந்த 22-ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புஷ்பராணியிடம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு ஒப்படைத்தது. ஜிப்மர் ஆய்வறிக்கை, 2-வது பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ பதிவுகளின் நகல்களை தங்களுக்கு வழங்குமாறு மாணவியின் தாய் செல்வி நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்தார்.இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நடுவர் புஷ்பராணி, அவற்றை ஆக.24-ல் (நேற்று) பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் நேற்று நடந்த விசாரணையின்போது, ஜிப்மர் ஆய்வறிக்கை நகலை வழங்க நடுவர் புஷ்பராணி மறுப்பு தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து ஜிப்மர் ஆய்வறிக்கை நகலை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அதேநேரத்தில், 2-வது பிரேத பரிசோதனையின் அறிக்கை மற்றும் சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றின் நகல்களை மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞரிடம் வழங்க உத்தரவிட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் காசி விஸ்வநாதன், “உயர் நீதிமன்றம் உத்தரவு இல்லாததாலும், வழக்கின் விசாரணை முழுமை பெறாததாலும் எங்களுக்கு ஜிப்மர் ஆய்வு அறிக்கை வழங்க நடுவர் மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் உள்ள எங்கள் வழக்கு வரும் 29-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் ஜிப்மர் ஆய்வறிக்கையை வழங்க வலியுறுத்துவோம்.
தமிழக முதல்வரை, மாணவியின் தாய் செல்வி நாளை மறுநாள் (ஆக.27) சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் சி.வெ.கணேசன் கூறியுள்ளார்” என்றார்