

உள்ளாட்சி தேர்தலை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட தாக வந்த தகவலையடுத்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நடத்திய செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் அக் டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த மாதம் 25-ம் தேதி அறிவிக்கப் பட்டது. அக்டோபர் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. மொத்தம் 4 லட்சத்து 97 ஆயிரத்து 840 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் நேற்று செய்தியாளர்களுக்கு தேர்தல் ஆணைய கூட்ட அரங்கில் பேட்டி அளித்தார். அப்போது, உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அந்த நேரத்தில் அவருக்கு 3 முறை செல்போன் அழைப்புகள் வந்தன. 3-வது முறை அழைப்பு வந்தபோது “சிறிதுநேரம் காத்திருங்கள்” என்று சொல்லிவிட்டு அவரது அறைக்குச் சென்றார். பின்னர் கூட்ட அரங்குக்கு திரும்பிய அவர், “இத்துடன் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக்கொள்ளலாம்” என்றார்.
இதனிடையே உள்ளாட்சி தேர் தலை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரவியது. அதுகுறித்து தேர்தல் ஆணையரிடம் கேட்டபோது, “உயர் நீதிமன்ற உத்தரவு பற்றிய முழு விவரம் எனக்கு தெரியவில்லை. அது தெரியாமல் நான் எந்த கருத்தையும் தெரிவிக்க இயலாது” என்றார்.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தேர்தல் ஆணையம் அல்லது அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பதில் எதையும் தெரிவிக்காமல் புன்முறுவலுடன் ‘நன்றி’ என்று மட்டும் கூறிவிட்டு கூட்ட அரங்கில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.