அதிகாலை பெய்த கனமழையால் சென்னையில் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேக்கம்

சென்னையில் நேற்று அதிகாலை பரவலாக மழை பெய்ததால் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.படம்.பு.க.பிரவீன்
சென்னையில் நேற்று அதிகாலை பரவலாக மழை பெய்ததால் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.படம்.பு.க.பிரவீன்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் நேற்று அதிகாலையில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

சென்னையில் கடந்த சில தினங்களாக பகலில் கடும் வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்த நிலையில், நேற்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் பரவலாக தொடங்கிய மழை, கனமழையாக பெய்தது.

நேற்று காலை 6.30 மணி வரை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக பெரம்பூர், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் 5 செமீ,மயிலாப்பூர், அயனாவரம், எம்ஜிஆர் நகரில் தலா 3 செமீ, அம்பத்தூர், சென்னை மாவட்ட ஆட்சியர்அலுவலகம், தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில் தலா 2 செமீமழை பதிவாகி உள்ளது.

அதிகாலை பெய்த கனமழை காரணமாக சென்னையில் பெரம்பூர், கீழ்ப்பாக்கம், அயனாவரம், எழும்பூர், புளியந்தோப்பு, புரசைவாக்கம், வேப்பேரி, வில்லிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.இதனால் காலையில் பணிக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரிமாணவர்கள் சிரமத்துக்குள்ளாயினர்.

வாகன ஓட்டிகள் வாகனங்களை முறையாக இயக்க முடியாமல் அவதிப்பட்டனர். எழும்பூர்ராஜரத்தினம் விளையாட்டரங்களில் மழை நீர் தேங்கியதால், நேற்று அங்கு நடைபெற இருந்த காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான உடல் தகுதி தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

மழைநீர் தேங்கிய இடங்களில் அவற்றை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பொக்லைன் போன்ற வாகனங்களைக் கொண்டு வந்து, தடை ஏற்பட்ட பகுதிகளில் வழி ஏற்படுத்தி தேங்கிய நீர் வடிக்கப்பட்டது.

சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடியமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதை எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சி அலுவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in