

சென்னை: கோயம்பேடு சந்தை வளாகத்தில்விநாயகர் சதுர்த்தி சிறப்பு சந்தைஇன்று திறக்கப்படுகிறது. இந்தச்சந்தை ஆக.31 வரை செயல்படும்.
கோயம்பேடு சந்தை நிர்வாகம் சார்பில், ஆண்டுதோறும், பொங்கல், ஆயுதபூஜை ஆகிய பண்டிகைகளின்போது சிறப்பு சந்தைகள் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல, கடந்த 2015-ம் ஆண்டு முதல்விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் சிறப்பு சந்தை திறக்கப்பட்டு வருகிறது. கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பு சந்தை திறக்கப்படவில்லை.
சென்னையில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு சந்தை வளாகத்தில் மலர் அங்காடி அருகில் இன்று சிறப்பு சந்தை திறக்கப்படுகிது. இது வரும் 31-ம் தேதி வரை செயல்பட உள்ளது. இதில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தேவையான பொரி, கரும்பு, பூசணிக்காய், மஞ்சள் கொத்து, மாவிலை தோரணங்கள், வாழைப் பழம் உள்ளிட்ட பழ வகைகள், வாழை இலை, தேங்காய், மலர் மாலைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்பட உள்ளன.
இது தொடர்பாக கோயம்பேடு சந்தை நிர்வாகக்குழு அலுவலக அதிகாரிகள் கூறும்போது, “பண்டிகைக்கு தேவையான பொருட்களை விலை மலிவாக, ஒரே இடத்தில் வாங்கிச் செல்லும் வகையில் இந்த சிறப்புச் சந்தை திறக்கப்படுகிறது. பண்டிகைக் கால பொருட்களை விற்பனை செய்வோர் ஏலதாரரிடம் தினந்தோறும் அனுமதி சீட்டு பெற வேண்டும். அனுமதி சீட்டு 24 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லத் தக்கது. அனுமதி சீட்டு இன்றி வியாபாரம் செய்பவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்” என்றனர்.