

சொகுசு கார் மோதி ஆட்டோ ஓட்டுநர் பலியான வழக்கில் சட்டக்கல்லூரி மாணவர் மற்றும் தொழிலதிபர் மகன் ஆகியோர் ரூ 39. 50 லட்சத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வங்கியில் செலுத்தி நிபந்தனை ஜாமீனில் செல்ல உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆழ்வார்பேட்டை கதீட்ரல் சாலையில் கடந்த மாதம் 19-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு அதிவேகமாக வந்த சொகுசு கார் அப்பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 ஆட்டோக்கள் மீது மோதியது. இதில், ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர் ஆறுமுகம் பலியானார். இதுதொடர்பாக சொகுசு காரை குடிபோதையில் ஓட்டியதாக கார் பந்தய வீரரும், சட்டக்கல்லூரி மாணவருமான விகாஷ் ஆனந்த்(22) மற்றும் தொழிலதிபரின் மகனான சரண்குமார்(36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று தனி நீதிபதி முன்பு நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தனது உத்தரவில், ‘‘ விகாஷ் ஆனந்த் சட்டக்கல்லூரி மாணவர். சம்பவம் நடந்தபோது விகாஷ் ஆனந்த் மற்றும் சரண்குமார் இருவருமே மதுபோதையில் இருந்துள்ளது மருத்துவ பரிசோதனையில் ஊர்ஜிதமாகியுள்ளது. விகாஷ் ஆனந்த் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டி 12 ஆட்டோக்கள் மீது மோதியுள்ளார். எனவே அவர் படுகாயமடைந்த 3 பேருக்கும் தலா ரூ. 2.50 லட்சம் வீதம் ரூ. 7.50 லட்சமும், சிறு காயமடைந்த 5 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 5 லட்சமும், விபத்தில் இறந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளின் கல்விக்காக ரூ. 15 லட்சமும் இழப்பீட்டுத் தொகையாக வங்கியில் முதலீடு செய்ய வேண்டும்.
ரூ. 27.50 லட்சத்தில் ரூ. 7.50 லட்சத்தை தற்போது முதலீடு செய்துள்ளனர். மீதி தொகையை நவம்பர் 11-ம் தேதிக்குள் டெபாசிட் செய்யாவிட்டால் ஜாமீன் தானாக ரத்தாகிவிடும். சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5.30 மணிக்கு இவர்கள் ஆஜராக வேண்டும். அதேப்போல் சரண்குமார், மதுபோதையில் இருந்த கார் பந்தய வீரரான விகாஷ் ஆனந்திடம் தனது சொகுசு காரை கொடுத்து ஓட்டச் சொல்லியுள்ளார். எனவே சேதமடைந்த 12 ஆட்டோக்களுக்கும் இழப்பீடாக தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 12 லட்சத்தை சரண்குமார் முதலீடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு ஜாமீன் வழங்கப்படுகிறது. தினமும் காலை 10.30 மணிக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டார்.