வதந்தி கைதுகள்: மார்கண்டேய கட்ஜு கடும் விமர்சனம்
அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல் நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடும் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாநில டிஜிபி ஆகியோருக்கு திறந்த கடிதம் ஒன்றை அவர் வெளியிட்டு கூறியிருப்பதாவது:
“இந்த விவகாரத்தில் கொஞ்சம் அதிகப்படியாகச் செல்கிறீர்கள். சட்டத்தின் எந்த பிரிவுகளின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள்? இது என்ன ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா? தமிழ்நாட்டில் பேச்சுச் சுதந்திரம் இல்லையா?
அரசும், போலீஸும் இவ்வகையான சட்ட விரோத செயல்களிலிருந்து விலகவில்லையெனில், அரசியல் சாசன சட்டப்பிரிவு 356-ன் கீழ் தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு நான் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் முறையிடுவேன். அதாவது தமிழகத்தில் அரசியல் சட்ட எந்திரம் உடைந்து விழுந்து விட்டது என்ற அடிப்படையில் இந்த முறையீட்டை நான் மேற்கொள்வேன்.
குடியரசுத்தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்ட பிறகு நீங்கள் அனைவரும் விசாரணையை சந்திக்க வேண்டிவரும், நியூரம்பர்க் விசாரணைகளில் நாஜி போர்க் குற்றவாளிகளுக்கு அறிவித்த கடுமையான தண்டனைகளை உங்களனைவருக்கும் வழங்க வேண்டியது அவசியமாகிவிடும்”
என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் மார்கண்டேய கட்ஜு.
