Last Updated : 25 Aug, 2022 04:24 AM

2  

Published : 25 Aug 2022 04:24 AM
Last Updated : 25 Aug 2022 04:24 AM

டிஎஸ்பியாக பதவி உயர்வின்றி ஓய்வுபெறும் காவல் ஆய்வாளர்கள் - 11 ஆண்டு ‘ஜூனியர்’களுடன், ஒரே ரேங்க்கில் பணி செய்யும் நிலை

கோப்புப்படம்

சென்னை: போதிய தகுதி, திறமை இருந்தும் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற முடியாமல், 1997-ம் ஆண்டு நேரடியாக எஸ்ஐயாக தேர்வான போலீஸார், தற்போது ஆய்வாளராகவே ஓய்வுபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட போலீஸார், டிஜிபிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

1997-ம் ஆண்டில் நேரடி தேர்வு

தமிழக காவல் துறையில் 750 காவல் உதவி ஆய்வாளர்கள் 1997-ம்ஆண்டு நேரடியாக தேர்வாகி, தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் ‘விங்‘ என அழைக்கப்படும் காவல் சிறப்பு பிரிவுகளில் பணிபுரிந்துவருகின்றனர். இவர்களில் 570 பேர் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று விட்டனர். ஆனால், மீதமுள்ள 180 பேர் 2008-ம் ஆண்டு முதல் 14 ஆண்டுகளாக பதவி உயர்வின்றி ஆய்வாளராகவே பணியாற்றுகின்றனர்.

நேரடி எஸ்ஐ.க்களாக பணியில் சேருவோர், 10 ஆண்டுகளில் ஆய்வாளர்களாக உயர்வு பெற்று விடுவார்கள். அடுத்த 10 ஆண்டுகளில் டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால், அந்த நடைமுறை பின்பற்றப்படாமல் 180 பேர் 24 ஆண்டுகள் பணி முடித்து ஒருநிலை பதவி உயர்வு மட்டுமே பெற்று ஆய்வாளர் நிலையிலேயே பணி ஓய்வு பெறுகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட போலீஸார் கூறியதாவது:

எங்களுடன் பணியில் சேர்ந்த 570 பேர் டிஎஸ்பியான நிலையில் எங்களுக்குப் பின்னால் பணியில் சேர்ந்த (1999, 2000, 2004, 2008-ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள்) எஸ்ஐ.க்கள் தற்போது ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு பெற்று எங்களுடனேயே பணிபுரிகின்றனர். பதவி உயர்வு இல்லாத மன அழுத்தம் ஒருபுறம் இருக்க, எங்களுடன் பணியில் சேர்ந்து டிஎஸ்பியாக உயர்வு பெற்றவர்களுக்கு நாங்கள் சல்யூட் அடிக்க வேண்டிய நிலை உள்ளது.

மன உளைச்சல், விரக்தி

அதுமட்டுமின்றி, எங்களுக்கு 11 ஆண்டுகளுக்குப் பின் தேர்வாகி, எங்களுடன் தற்போது ஆய்வாளராகப் பணிபுரிபவர்கள், எங்களை பற்றி கிண்டல் பேசுகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சினை குடும்பத்தையும் பாதிக்கிறது. எங்களது பிள்ளைகள், ‘நீங்கள் ஏதேனும் தவறு செய்தீர்களா, அதனால்தான் பதவி உயர்வு கிடைக்கவில்லையா?’ என கேட்கும்போது எங்களுக்கு விரக்தி ஏற்படுகிறது.

சிறப்பாகப் பணியாற்றியும், தகுதி இருந்தும் எங்களுக்கான உரிமை கிடைக்காதது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளால் டிஎஸ்பிக்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஒருமித்த கருத்துடன் செயல்பட முடியாத சூழல் உருவாகும். காவல்துறைக்கு இது உகந்தது அல்ல. இதைச் சுட்டிக்காட்டி, பதவி உயர்வு வழங்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, போதிய காலி பணியிடங்கள் இல்லாததால் டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்க முடியவில்லை என டிஜிபி அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி, பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர்களிடம் கேட்டபோது, ‘‘01.08.2020 அன்று 81 பேர் நேரடி டிஎஸ்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது எங்களுக்கு பதவி உயர்வு வழங்கி ஒதுக்கப்பட வேண்டிய இடம். ஆனால், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

போதிய காலி பணியிடங்கள் இல்லாத நிலையில், அதிகப்படியாக 81 பேர் ‘குரூப் 1’ மூலம் தேர்வு செய்யப்பட்ட விதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதில், போலீஸ் அதிகாரிகளின் வாரிசு, முக்கிய அதிகாரிகளின் குடும்பத்தினரும் நேரடி டிஎஸ்பியாக தேர்வாகி அவர்களுக்கு பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை உரிய விசாரணை நடத்தி எங்களுக்கான நியாயம் மற்றும் டிஎஸ்பி என்ற உரிமையை பெற்றுத் தர வேண்டும்’’ என்றனர்.

இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் போதுமான அளவில் புதிய பணியிடங்களைஉருவாக்குவதன் மூலமும், எஸ்பிசிஐடி, க்யூ பிரிவு ஆகியவற்றில் பழைய முறைப்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் டிஎஸ்பிக்களை நியமிப்பதன் மூலமும் புதிய பணியிடங்களை உருவாக்கி, தகுதியான காவல் ஆய்வாளர்களுக்கு, அவர்கள் ஓய்வுபெறும் முன் டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x